ரோமாபுரிப் பாண்டியன்
இடையிடையே கொஞ்சம் எளிமையான நடை மற்றும் கதைக் களங்கள் கொண்ட நாவல்களையும் வாசிக்கலாம் எனச் சிலவற்றை வாங்கினேன் அதில் ஒன்று கருணாநிதி எழுதிய ரோமாபுரிப் பாண்டியன். வெவ்வேறு எழுத்தாளர்களின் பாணி மற்றும் கருத்து நடைகளைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் மற்றும் ஒரு காரணம். கருணாநிதி எழுதிய ஏதாவது ஒரு நாவலை மட்டும் முதலில் வாங்கலாம் என முடிவு செய்தேன் ஆனால் எதை வாங்குவது என்பதில்தான் குழப்பம் பின்பு எனது மாமாவின் சிபாரிசினால் ரோமாபுரிப் பாண்டியன் நாவலைத் தேர்ந்தெடுத்தேன்.
மற்றுமொரு சரித்திர கதை... கி.மு 20-ஆம் ஆண்டில் நடப்பதாகக் கதை உள்ளது. கரிகால்சோழனும், பெருவழுதிப் பாண்டியனும் நட்பு பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். கரிகாலனால் தோற்கடிக்கப் பட்ட குறுநில மன்னனான இளங்கோவேள் அவனை வீழ்த்த செய்யும் முயற்சியை முறியடிக்கிறான் பாண்டிய வீரன் செழியன். காயம்பட்ட செழியனை இளங்கோவேளின் ஆட்கள் சிறைப்படுத்த அவனை மீட்கப் புலவர் காரிக்கண்ணாரின் மகள் முத்துநகை ஆண் வேடம் அணிந்து புறப்படுகிறாள்.
மாறுவேடத்தில் இருக்கும் இளங்கோவேளிடம், முத்துநகை காதல் வசப்படுகிறாள். சிறையில் இருக்கும் செழியன், இளங்கோவேளின் தங்கை தாமரைதான் முன்பு தனக்காகப் பார்த்த பெண் என்பதனை தெரிந்து கொண்டு அவள் மீது ஆசைப் படுகிறான். ஆண் வேடத்தில் இருக்கும் முத்துநகையிடம் தாமரை மயங்குகிறாள். ஒரு கட்டத்தில் இளங்கோவேளின் மனைவியே கரிகாலனைக் கொல்ல முயற்சி செய்ய பல குழப்பங்களுக்கு இடையே இளங்கோவேள் முத்து நகையால் கொலை செய்யப் படுகிறான்.
இதுவரை கொஞ்சம் சுவாரசியமாகச் சென்ற கதை தடம்புரள்கிறது. தாமரை மீது பாண்டிய இளவரசன் இளம்பெருவழுதியின் காதல்... செழியனின் ரோமாபுரிப் பயணம்... அங்கு உள்ள ஜூனோ... அவளைப் பற்றிய ரகசியம் என. இளங்கோவேளின் பழிவாங்கும் படலத்தை மட்டுமே இன்னும் கொஞ்சம் சுவாரசிய படுத்தி நீட்டி எழுதியிருந்தால், ஒரு நல்ல நாவல் படித்த உணர்வைத் தந்திருக்கலாம். என்ன ரோமாபுரிப் பாண்டியன் கிடைத்திருக்க மாட்டான்.
பிறப்பின் ரகசியங்களே பொதுவாகச் சரித்திர கதைகளின் மூலமாக உள்ளது. இதிலும் அது இருந்தாலும்... அது சொல்லப்பட்ட விதம் பெரிய உணர்வுகளை ஏற்படுத்தவில்லை. ரோமாபுரிப் பாண்டியன் என்னை ரொம்பக் கவராமல் போனதற்குக் காரணம், கொஞ்சக் காலமாக நான் யதார்த்தமான நாவல்களுக்கு மாறி விட்டது கூட இருக்கலாம். இந்த நாவலில் ஒரு சதவீதம்தான் வரலாறு மீதியெல்லாம் கற்பனை என நினைக்கிறேன்.
இறுதியாக:
நாவலாசிரியர் கருணாநிதி, அந்நிய மொழியைச் சிலர் புகுத்த நினைப்பதைத் தடுத்துப் போராடுவது. சுயாட்சி, கூட்டாட்சி தத்துவங்கள், பகுத்தறிவு தத்துவங்கள் போன்ற தன்னுடைய கருத்துக்களையும் நாவலில் அழகாக ஆங்காங்கே அள்ளி தெளித்துவிட்டார். மேலும் தளபதி நெடுமாறன், மன்னருக்குப் பின் அவரது மகனைத் தள்ளிவிட்டு தான்தான் அரியணையில் ஏற வேண்டும் என சில வேலைகளைச் செய்கிறான்.. அது யாரை மனதில் வைத்து எழுதப்பட்டதோ....😜
மகனே தளபதி ஆனதால் வந்த சலனமோ? 😜
ReplyDelete