Monday, 16 August 2021

விசாரணைக் கமிஷன்

 

                   விசாரணைக் கமிஷன் - சா. கந்தசாமி               



    சா. கந்தசாமி அவர்களின் சாயாவனம் நாவலைப் பற்றி பலர் சிகாலித்துக் கூறுவதை அறிந்துள்ளேன். நீண்ட காலமாக அதனை வாசிக்க எண்ணுகையில் 1998'ஆம் சாகித்ய அகாடமிவிருது பெற்ற விசாரணைக் கமிஷன் நாவல் கிடைத்தது. அதனால் அதனை முதலில் வாசித்து என் எண்ணங்களை எழுதியுள்ளேன். 

              நாவலின் கதாநாயகன் &  நாயகி தங்கராசும், ருக்குமணியும்தான். கணவன் தங்கராசு அரசாங்க பஸ் கண்டக்டர், மனைவி ருக்குமணியோ பள்ளிக்கூடத்தில் ஆசிரியர். திருமணமாகிப் பல வருடங்கள் ஆகியும் இருவருக்கும் குழந்தை இல்லை. அவர்களின் அன்னியோன்னியமான வாழ்க்கையை மிகவும் யதார்த்தமாக அவர்களின் நினைவோடைகளின் வாயிலாக நாவலை சா.கந்தசாமி எழுதியுள்ளார். தங்கராசு, ருக்குமணியிடம் கோபப்படுவது பின்பு அவனே சமாதானம்தான் ஆகி அவளிடம் பேசுவதும் இயற்கையாக உள்ளது. குழந்தை இல்லாததை ஒருபோதும் தங்கராசு குறையாக ருக்குமணியுடன் பேசுவதில்லை.

                         நினைவோடு சம்பவங்களால் நாவல் பல காலகட்டத்திற்குப் பயணித்தாலும், கதாபாத்திரங்களின் பேச்சுக்கு நடுவையே காலத்தைப் பதிவு செய்யும் ஆசிரியரின் எழுத்து நுணுக்கம், நம்மைக் கதையினுள் ஈர்த்து விடுகிறது. பாரதிவாணன், ருக்குமணியை பாராட்டும் பொழுது "உங்க கலைத்திறமையை வைத்துத்தான் அறிஞர் அண்ணாவிடம் கையெழுத்து வாங்கப் போகிறேன் என்பதும், பஸ் டெப்போவில் இரண்டு போக்குவரத்து ஊழியர்கள் எம். ஜி. ஆரை கட்சியை விட்டு நீக்கி விட்டார்கள் என்பதும், "இந்திரா காந்தியைச் சுட்டு விட்டார்கள்"  என்று சரோஜா டீச்சர், ருக்குமணியிடம் கூறுவதும், நாவலின் இறுதிக்கட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் "ராஜீவ் காந்திக்கு ஆதரவு தாரீர்" என்று ஒலிப்பதின் மூலமாகக் கதையின் காலகட்டங்களை நமக்குத் தெளிவுபடுத்துகிறார். 

                          தான் உண்டு, தன் வேலையுண்டு என தன் வேலையில் இருக்கும் தங்கராசு, மற்றும் அவரின் சக ஊழியர்களின் மூலமாக பஸ் டெப்போவில் நடக்கும் உண்மையான நிகழ்வுகளை அப்படியே எழுதியுள்ளார். அவர்கள் பேசும் தற்கால அரசியல், நடத்துநர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சந்திக்கும் பிரச்சினைகள், அங்கு நடைபெறும் அரசியல் என்பது ஒருபக்கமெனில் மறுபக்கம் ஆசிரியர்களின் உலகம் சித்தரிக்கப்படுகிறது. ஒரு சாதாரண ஆசிரியரும், பேருந்து நடத்துநரும் அவர்களின் சுயநல செயல்பாடுகளால் எவ்வாறு அரசியல் தலைவர்களாக உருமாறுகிறார்கள் என்பதைத் தெளிவாக விளக்குகிறார்.

                        தொண்டை வலியால் அவதிப்படும் ருக்குமணியிடம் அவளது நாய் டைகர் செலுத்தும் ஆழமான அன்பை மிக அற்புதமாக தன்னுடைய எழுத்தால் வாசிக்கும் அனைவருக்கும் அதுபோல் ஒரு நாய் வளர்க்க வேண்டும் என்னும் ஆர்வத்தைத் தூண்டுகிறார். கடைசி அத்தியாயத்தில்தான்  நாவலின் தலைப்புக்குள் நுழைகிறது கதையின் போக்கு. காவல் துறைக்கும், போக்குவரத்து ஊழியர்களுக்கும் தொடக்கும் ஒரு சாதாரண சண்டை எப்படி பெரிய கலவரமாக, போராட்டமாக மாறியது. அதில் சம்பந்தமேயில்லாத தங்கராசு மாட்டிக்கொள்ள அது அவன் குடும்பத்தை எவ்வாறு பாதித்தது என்பதுதான் நாவலின் முடிவு. 

                         மாவட்ட ஆட்சியர், அந்த கலவங்களைப் பற்றி ஆய்வு செய்ய ஒரு விசாரணைக் கமிஷன் அமைக்கிறார்.  சமூக போராட்டங்கள் எப்படி ஒரு குடும்பத்தின் நிம்மதியைச் சீர்குலைக்கிறது என்பதுதான் நாவலின் அடிநாதம். நாவலின் சில இடங்களில்  தலபுராணங்கள் (கோவில்) வருகிறது அவை நாவலுக்கு எந்த வகையில் வலுசேர்க்கவில்லை.

இறுதியாக:                    

                   நாவலின் தலைப்பைப் பார்த்தவுடன் எதாவது கிரைம் விசாரணை நாவலாக இருக்குமோ என்று நினைத்துத்தான் வாசிக்க ஆரம்பித்தேன். ஆனால் நாவல் முற்றிலும் என் எண்ணத்திற்கு மாறாக ஒரு (பல) சமூகப் பிரச்சினையை மிக ஆழமாக அலசியது. காவல் துறைக்கும், போக்குவரத்துத் துறைக்குமான மோதல் போக்கு பற்றிய பல செய்திகளை நான் மாணவனாக இருந்த பொழுது நாளிதழ்களில் வாசித்துள்ளேன். அத்தகைய போக்கு இப்பொழுது குறைந்திருப்பது கொஞ்சம் ஆறுதல் தந்தாலும் சமூக மோதல்களின் களங்கள் மாறியிருப்பது இன்னும் வருத்தமடையச் செய்கிறது. 

Thursday, 24 June 2021

தோல்

 

                                  தோல் - டி. செல்வராஜ்

     

      2012'ஆம் சாகித்ய அகாடமி விருது பெற்ற தோல் நாவலை வாசிக்கச் சிலமுறை முயற்சி செய்தும் பல்வேறு காரணங்களால் தள்ளிப்போனாலும் இறுதியில் வாசித்து முடித்தேன். ஆசிரியர் டி. செல்வராஜ், நாவலில் வரும் கதைமாந்தர்களின் பெயர் மற்றும் சிறுகுறிப்பை முதலிலே சொல்லி விடுகிறார். சுமார் 117 பேர்.. அதைப் பார்த்தவுடன் நாவலை வாசிப்பது கொஞ்சம் கடினமான பயணமோ என்ற எண்ணத்தை மனதில் ஏற்படுத்தியது. ஆனால் தொடங்கிய பின் டி. செல்வராஜின் எளிமையான நடை வாசிப்பை எளிதாக்கியது. 

             இந்தியா சுதந்திரம் பெறாத காலத்தில் (1940 காலகட்டத்தில்) திண்டுக்கல் நகரிலுள்ள தோல் பதனிடும் தொழிற்சாலைத் தொழிலாளி ஓசேப்பு தன் முதலாளி அஸன் ராவுத்தரின் மைத்துனன் முஸ்தாபா மீரானை அடித்துவிட்டதாகத் தொடங்கும் நாவல் அந்த தொழிலாளிகளின் வாழ்வையும், அவர்களுக்கு நிகழும் வதைகள், அதனையொட்டி துவங்கும் தொழிலாளர்களின் போராட்டங்கள், முதலாளிகளின் அடக்குமுறைகள், அந்த நெருக்கடிகளால் உருவாகும் தொழிற்சங்கங்கள் எவ்வாறு அவர்களின் உரிமைகளை மீட்டெடுத்த வரலாற்றை விவரிப்பதுதான் தோல் நாவல். 

               இதுவரையில் ஒரு பறையனின் கரமும் தோல்ஷாப்பு முதலாளியின் மேல் பட்டதில்லை என்று ஆரம்பிக்கும் வரியிலே டி. செல்வராஜ் குறிப்பால் உணர்த்தி விடுகிறார். தொழிலாளியின் கரம் என்று கூறாமல் பறையனின் கரம் என்பதின் மூலமாக அக்காலத்தில் தொழிலாளர்களின் பிரச்சினை ஒரு வர்க்கப்போராட்டமாக மட்டுமில்லாமல் அடிப்படையில் சாதிரீதியான பிரச்சினையாகவும் இருந்தது என்பதைப் படம் பிடித்துக்கட்டுகிறார்.  மேலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்குள்ளே நிலவிய தீண்டாமையையும் நேர்மையாகப் பதிவு செய்துள்ளார். ஹரிஜன சேவா சங்கத்தின் தலைவரான சுந்தரேச அய்யர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உதவுகிறார். அவரது மகன் வக்கீல் சங்கரன் அவர்களின் சமூக எதிர்ப்புகளையும் மீறிப் படாத பாடுபட்டு தொழிற்சங்கத்தையும் உருவாக்கி அந்த தொழிற்சங்கங்களை நசுக்க அரசு மற்றும் முதலாளிகள் கொடுக்கும் தொல்லைகளை எதிர்த்துப் போராடி அவர்கள் நலனே தன் நலன் என்று வாழ்கிறான். 

                    தொழிற்சங்கங்களைப் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் மட்டுமல்ல, இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பு அமைந்த அரசுகளும் தங்கள் அதிகாரத்தையும், குறுக்கு வழிகளைப் பயன்படுத்தியும்  முடக்கவே முயற்சி செய்கின்றன. வாய்ப்பு கிடைக்கும் பொழுது எல்லாம் சாதி அரசியில், உண்மையாக தேசவிடுதலைக்கு பாடுபட்ட சில தொண்டர்களின் நிலைமை, உணவுப் பஞ்சத்தின் போது அரசாங்கம் மற்றும் சில வியாபாரிகளின் செயல்பாடு என வரலாற்றையும் பதிவுசெய்கிறார் டி. செல்வராஜ். ஓசேப்பு நகரசபை தலைவர் ஆவதாக நாவலை முடித்திருப்பது அடிப்படை உரிமைகளை இறுதியில் அவர்கள் போராட்டங்களின் வாயிலாகப் பெற்றிருப்பதைக் காட்டுகிறது.  மேலும் கட்டுக்கோப்பான வாழ்க்கை வாழும் சங்கரனின் தாயார் அம்புஜத்தம்மாள், தேவதாசிக் குலத்துப் பெண்ணான வடிவாம்பாளை தன் மருமகளாக ஏற்றுக்கொள்வதும் சிறப்பு.

                    எண்ணற்ற கதாபாத்திரங்களைக் கொண்டிருந்தாலும் ஓசேப்பு, ஆசிரியர் இருதயசாமி, கழுவத்தேவன், வேலாயுதம், சந்தனத் தேவன், மினிசாமி, துண்டு பாய் என்கிற சவுக்கத்து அலி, தாயம்மாள், அருக்காணி, தேவசகாயம், வெள்ளைத்துரை, வீராயி போன்ற பாத்திரங்கள் மனதில் நிற்கிறது. அந்த மக்களின் ஆதரவற்ற நிலைமை நேரடியாக மிகைப்படுத்துதல் எதுவுமில்லாமல் சொல்லப்பட்டுள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களை உறிஞ்சும் வகையில் எல்லா முதலாளிகளும் இனம், மதம், அரசியல் வேறுபாடு பார்க்காமல் இணைந்து செயல்படுவதைத் தோலுரித்துக் காட்டுகிறார். 

                தோல் நாவலை டி. செல்வராஜ் ஒரு சோஷியலிஸ யதார்த்தவாத நாவலாக எழுதியுள்ளார். ஒடுக்கப்பட்ட பாட்டாளி மக்கள், வர்க்க உணர்வு பெற்று சங்கங்கள் அமைத்து அதன் வழியே  ஒன்றிணைந்து போராடி வெற்றி பெறுவதுதான் நாவலின் மையக்கரு. தொழில்நுட்பங்கள் பெரிய வளர்ச்சி அடையாத காலத்தில் தோல் தொழிற்சாலைகளின் சுண்ணாம்புக் குழியில் முறி எழுதிக்கொடுத்து அடிமையாக வேலைப்பார்க்கும் தொழிலாளர்கள் சந்திக்கும் இன்னல்களை, எழுச்சிமிக்க போராட்ட வாழ்வை நாவலின் முற்பகுதி சித்தரிக்கிறது. ஆனால் பிற்பகுதியில் உரிமைப் போராட்டங்கள், தலைமறைவு வாழ்க்கை, அரசாங்கங்களுக்கு எதிரான குரல்களையே பேசுவதால் பொதுவுடைமை இலக்கிய பிரச்சார நெடியாகச் சில இடங்களில் தோன்றினாலும் ஆசிரியர் தன்னுடைய எழுத்தாற்றலால் அதனைப் போக்க முயன்றுள்ளார்.       

  இறுதியாக:        

        உலகத்தில் பொதுவாக எல்லா இயக்கங்களும் அந்தந்த காலகட்டத்தின் சூழ்நிலைகளைப் பொறுத்து மக்களை அவர்களின் நிலைகளிலிருந்து மேம்படுத்தி மீட்கவே தோன்றின. காலமாற்றங்களில் அந்த இயக்கங்களின் மேல் மிகவும் கூர்மையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது அதனால் மிகவும் பயன்பெற்ற இன்றைய தலைமுறையினரால் கூட. அதற்கான ஒரு காரணம் அந்த இயக்கங்கள் அவர்களின் முந்தைய தலைமுறையினரின் வாழ்வியலில் ஏற்படுத்திய மாற்றங்களை அவர்களிடம் கொண்டு போய் சேர்க்காததும். இதுபோன்ற நாவல்கள் அந்த குறையைக் கொஞ்சம் போக்குகிறது. ஆனால் காலமாற்றத்திற்கு ஏற்ப அந்த இயக்கங்களும் தங்களைப் புனரமைத்துக் கொள்ளாததும் இன்னொரு பெரிய காரணம். 

Thursday, 20 May 2021

செல்லாத பணம்

 

                  செல்லாத பணம் - இமயம்     


    இமயத்தின் முதல் நாவலான கோவேறு கழுதைகள் வாசித்துவிட்டு அது தந்த அனுபவத்தை எழுதியுள்ளேன். செல்லாத பணம் நாவலுக்கு 2020'ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது கிடைத்த செய்தி கிடைத்தவுடன் நாவலை வாங்கி வாசித்தேன். 

        செல்லாத பணம் நாவல் நீண்டதொரு கதையைச் சொல்லும் நாவல் அல்ல. ஒரு சம்பவத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அதனை மிக யதார்த்தமாக, பெரிய திடீர் திருப்பங்கள் கிடையாது ஆனால் வாசிப்பவரை  பதைபதைப்போடு அடுத்து என்னவாகும் என்ற எதிர்பார்ப்பைத் தூண்டும் வகையில் இமயம் எழுதியுள்ளார். பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் நடேசன், அமராவதி தம்பதியினருக்கு முருகன், ரேவதி என இருபிள்ளைகள். பொறியியல் படிக்கும் ரேவதி எதிர்பாராதவிதமாக ஆட்டோ டிரைவர் ரவியைக் காதலித்து திருமணம் செய்கிறாள். குணநலன்கள் சரியில்லாத ரவியால் மிகவும் சித்திரவதைகள் படும் அவள் ஒருநாள் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறாள். நடேசனின் குடும்பம் எவ்வளவு பணம் செலவழித்தும் ரேவதியைக்  காப்பாற்ற முயற்சி செய்ய அந்த பணம் அவளைக் காப்பாற்றியதா என்பதுதான் நாவலின் முடிவு.

             ரேவதி பர்மா பஜாரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ரவியைக் காதலிப்பதும், அதற்குப் பெற்றோர்கள் மறுப்பு தெரிவிப்பதும், அவள் தன் முடிவில் இறுக்கமாக நிற்பதால் வேறு வழியின்றி அவனுக்கே திருமணம் செய்துக்கொடுப்பதுமான கதையின் முன்பகுதி சுமார் 25 பக்கங்கள்தான். நாவலின் மீதி பக்கங்கள் அனைத்தும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ரேவதி கிடக்கும் பொழுதுதான் நடக்கிறது. பெரும்பாலும் உரையாடல்களின் ஊடாக, அதுவும் உணர்வுகள் கொப்பளிக்கும் உரையாடல். ரேவதி தற்கொலை செய்யத் தீக்குளித்தாளா?, ரவிதான் கொளுத்தினானா? இல்லை தவறுதலாக நடந்த விபத்தா என்ற விவாதம் தொடர்ந்து கொண்டிருந்தாலும், ரேவதியின் குடும்பம் ரவிதான் கொளுத்தினான் என அவள் வாக்குமூலம் கொடுக்க வேண்டும் என நினைக்கிறார்கள் அவனை வஞ்சகம் தீர்க்க.

               புதுச்சேரி  ஜிப்மர் மருத்துவமனையில் நடைபெறும் தீக்காயத்திற்கான அவரச சிகிச்சை நடைமுறைகள், அங்குள்ள ஊழியர்களின் செயல்பாடுகள், நோயாளிகளின் உறவினர்களின் அணுகுமுறை எல்லாவற்றையும் வெகு இயல்பாக எழுதியுள்ளார். நாவலை வாசிக்கும்போது இமயத்தின் சொல்லாட்சியில் ஏதோ நாமே அந்த மருத்துவமனையிலிருந்து சம்பவங்களை நேரில் பார்ப்பது போல் தோன்றுகிறது. நாவலில் ரவி, முருகனின் மனைவி  அருள்மொழியிடம் தன் பக்க ஆதங்கத்தைப் பேசும் பகுதி முக்கியமானது. ரேவதியின் உறவினர்கள் எல்லோரும் தங்கள் பக்கம் மட்டுமே  சிந்திக்க, அருள்மொழி மட்டும் கொஞ்சம் ரவியின் பக்கமும் சிந்திக்கிறாள். ஆனாலும் ரவியின் தர்க்கங்கள் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை. 

                  கதாபாத்திரங்களின் தத்ரூபமான சித்தரிப்புகள், மிக யதார்த்தமான உணர்ச்சி பொங்கும் உரையாடல்களைக் கொண்டு இரண்டு வரிக்கதையை 200 பக்கங்களுக்கு மேல் நாவலாக இமயம் படைத்துள்ளார். நாவலில் வரும் சில கதைமாந்தர்கள் மிகச் சாதாரணமாகப் பணத்தை வீச வேண்டியதுதானே என்கிறார்கள் ஆனால் எல்லா சூழ்நிலைகளிலும் பணம்  மட்டுமே அத்தியாவசியமானதல்ல என்பதை ஆசிரியர் இறுதியில் உணர்த்துகிறார். இமயத்தின் கதை சொல்லும் ஆற்றல் உங்கள் உள்ளத்தை ஊடுருவி கண்களில் கண்ணீரைத் துளிக்க வைக்கலாம். மனித உறவுகளில் சாதி, பணம், தகுதி ஏற்றத்தாழ்வுகள் எத்தனை சமூக சிக்கல்களை என்பதை உணர்வுப்பூர்வமாகப் புரிந்து கொள்ள வாசிக்கவேண்டிய நாவல் இந்த செல்லாத பணம். 

இறுதியாக :

         இதுபோன்ற வலிகளைப் பேசும் பல நாவல்கள் அதற்கான தீர்வை முன்வைப்பதில்லை. அதனால் சிலருக்கு நாவல் பேசும் பிரச்சினையின் ஆழம்  புரியாமல் வெவ்வேறு விதமாக அலசுவார்கள். 

            இது என்னுடைய ஐம்பதாவது பதிவு. 48 - புத்தகங்களைப் பற்றிய என் மனதில் பட்ட எண்ணங்கள், 2- என் மனதில் தோன்றிய சொந்த கதைகள். பெரிய திட்டமிடல் எதுவுமின்றி ஆரம்பித்த பயணம் 50'தை தாண்டி தொடர்கிறது. இதுவரை ஆதரவு தந்து உற்சாகப் படுத்திய அனைவருக்கும், இனி வரும்காலத்தில் தொடரும் பயணத்தில் சேர்ந்து பயணிக்க வருகை தரப்போகிறவர்களுக்கும் நன்றி 🙏...