Thursday 24 June 2021

தோல்

 

                                  தோல் - டி. செல்வராஜ்

     

      2012'ஆம் சாகித்ய அகாடமி விருது பெற்ற தோல் நாவலை வாசிக்கச் சிலமுறை முயற்சி செய்தும் பல்வேறு காரணங்களால் தள்ளிப்போனாலும் இறுதியில் வாசித்து முடித்தேன். ஆசிரியர் டி. செல்வராஜ், நாவலில் வரும் கதைமாந்தர்களின் பெயர் மற்றும் சிறுகுறிப்பை முதலிலே சொல்லி விடுகிறார். சுமார் 117 பேர்.. அதைப் பார்த்தவுடன் நாவலை வாசிப்பது கொஞ்சம் கடினமான பயணமோ என்ற எண்ணத்தை மனதில் ஏற்படுத்தியது. ஆனால் தொடங்கிய பின் டி. செல்வராஜின் எளிமையான நடை வாசிப்பை எளிதாக்கியது. 

             இந்தியா சுதந்திரம் பெறாத காலத்தில் (1940 காலகட்டத்தில்) திண்டுக்கல் நகரிலுள்ள தோல் பதனிடும் தொழிற்சாலைத் தொழிலாளி ஓசேப்பு தன் முதலாளி அஸன் ராவுத்தரின் மைத்துனன் முஸ்தாபா மீரானை அடித்துவிட்டதாகத் தொடங்கும் நாவல் அந்த தொழிலாளிகளின் வாழ்வையும், அவர்களுக்கு நிகழும் வதைகள், அதனையொட்டி துவங்கும் தொழிலாளர்களின் போராட்டங்கள், முதலாளிகளின் அடக்குமுறைகள், அந்த நெருக்கடிகளால் உருவாகும் தொழிற்சங்கங்கள் எவ்வாறு அவர்களின் உரிமைகளை மீட்டெடுத்த வரலாற்றை விவரிப்பதுதான் தோல் நாவல். 

               இதுவரையில் ஒரு பறையனின் கரமும் தோல்ஷாப்பு முதலாளியின் மேல் பட்டதில்லை என்று ஆரம்பிக்கும் வரியிலே டி. செல்வராஜ் குறிப்பால் உணர்த்தி விடுகிறார். தொழிலாளியின் கரம் என்று கூறாமல் பறையனின் கரம் என்பதின் மூலமாக அக்காலத்தில் தொழிலாளர்களின் பிரச்சினை ஒரு வர்க்கப்போராட்டமாக மட்டுமில்லாமல் அடிப்படையில் சாதிரீதியான பிரச்சினையாகவும் இருந்தது என்பதைப் படம் பிடித்துக்கட்டுகிறார்.  மேலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்குள்ளே நிலவிய தீண்டாமையையும் நேர்மையாகப் பதிவு செய்துள்ளார். ஹரிஜன சேவா சங்கத்தின் தலைவரான சுந்தரேச அய்யர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உதவுகிறார். அவரது மகன் வக்கீல் சங்கரன் அவர்களின் சமூக எதிர்ப்புகளையும் மீறிப் படாத பாடுபட்டு தொழிற்சங்கத்தையும் உருவாக்கி அந்த தொழிற்சங்கங்களை நசுக்க அரசு மற்றும் முதலாளிகள் கொடுக்கும் தொல்லைகளை எதிர்த்துப் போராடி அவர்கள் நலனே தன் நலன் என்று வாழ்கிறான். 

                    தொழிற்சங்கங்களைப் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் மட்டுமல்ல, இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பு அமைந்த அரசுகளும் தங்கள் அதிகாரத்தையும், குறுக்கு வழிகளைப் பயன்படுத்தியும்  முடக்கவே முயற்சி செய்கின்றன. வாய்ப்பு கிடைக்கும் பொழுது எல்லாம் சாதி அரசியில், உண்மையாக தேசவிடுதலைக்கு பாடுபட்ட சில தொண்டர்களின் நிலைமை, உணவுப் பஞ்சத்தின் போது அரசாங்கம் மற்றும் சில வியாபாரிகளின் செயல்பாடு என வரலாற்றையும் பதிவுசெய்கிறார் டி. செல்வராஜ். ஓசேப்பு நகரசபை தலைவர் ஆவதாக நாவலை முடித்திருப்பது அடிப்படை உரிமைகளை இறுதியில் அவர்கள் போராட்டங்களின் வாயிலாகப் பெற்றிருப்பதைக் காட்டுகிறது.  மேலும் கட்டுக்கோப்பான வாழ்க்கை வாழும் சங்கரனின் தாயார் அம்புஜத்தம்மாள், தேவதாசிக் குலத்துப் பெண்ணான வடிவாம்பாளை தன் மருமகளாக ஏற்றுக்கொள்வதும் சிறப்பு.

                    எண்ணற்ற கதாபாத்திரங்களைக் கொண்டிருந்தாலும் ஓசேப்பு, ஆசிரியர் இருதயசாமி, கழுவத்தேவன், வேலாயுதம், சந்தனத் தேவன், மினிசாமி, துண்டு பாய் என்கிற சவுக்கத்து அலி, தாயம்மாள், அருக்காணி, தேவசகாயம், வெள்ளைத்துரை, வீராயி போன்ற பாத்திரங்கள் மனதில் நிற்கிறது. அந்த மக்களின் ஆதரவற்ற நிலைமை நேரடியாக மிகைப்படுத்துதல் எதுவுமில்லாமல் சொல்லப்பட்டுள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களை உறிஞ்சும் வகையில் எல்லா முதலாளிகளும் இனம், மதம், அரசியல் வேறுபாடு பார்க்காமல் இணைந்து செயல்படுவதைத் தோலுரித்துக் காட்டுகிறார். 

                தோல் நாவலை டி. செல்வராஜ் ஒரு சோஷியலிஸ யதார்த்தவாத நாவலாக எழுதியுள்ளார். ஒடுக்கப்பட்ட பாட்டாளி மக்கள், வர்க்க உணர்வு பெற்று சங்கங்கள் அமைத்து அதன் வழியே  ஒன்றிணைந்து போராடி வெற்றி பெறுவதுதான் நாவலின் மையக்கரு. தொழில்நுட்பங்கள் பெரிய வளர்ச்சி அடையாத காலத்தில் தோல் தொழிற்சாலைகளின் சுண்ணாம்புக் குழியில் முறி எழுதிக்கொடுத்து அடிமையாக வேலைப்பார்க்கும் தொழிலாளர்கள் சந்திக்கும் இன்னல்களை, எழுச்சிமிக்க போராட்ட வாழ்வை நாவலின் முற்பகுதி சித்தரிக்கிறது. ஆனால் பிற்பகுதியில் உரிமைப் போராட்டங்கள், தலைமறைவு வாழ்க்கை, அரசாங்கங்களுக்கு எதிரான குரல்களையே பேசுவதால் பொதுவுடைமை இலக்கிய பிரச்சார நெடியாகச் சில இடங்களில் தோன்றினாலும் ஆசிரியர் தன்னுடைய எழுத்தாற்றலால் அதனைப் போக்க முயன்றுள்ளார்.       

  இறுதியாக:        

        உலகத்தில் பொதுவாக எல்லா இயக்கங்களும் அந்தந்த காலகட்டத்தின் சூழ்நிலைகளைப் பொறுத்து மக்களை அவர்களின் நிலைகளிலிருந்து மேம்படுத்தி மீட்கவே தோன்றின. காலமாற்றங்களில் அந்த இயக்கங்களின் மேல் மிகவும் கூர்மையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது அதனால் மிகவும் பயன்பெற்ற இன்றைய தலைமுறையினரால் கூட. அதற்கான ஒரு காரணம் அந்த இயக்கங்கள் அவர்களின் முந்தைய தலைமுறையினரின் வாழ்வியலில் ஏற்படுத்திய மாற்றங்களை அவர்களிடம் கொண்டு போய் சேர்க்காததும். இதுபோன்ற நாவல்கள் அந்த குறையைக் கொஞ்சம் போக்குகிறது. ஆனால் காலமாற்றத்திற்கு ஏற்ப அந்த இயக்கங்களும் தங்களைப் புனரமைத்துக் கொள்ளாததும் இன்னொரு பெரிய காரணம். 

4 comments:

  1. மிகவும் அருமை.. தோல் நாவலை வாசிக்கும் சந்தர்ப்பம் இதுவரை எனக்கும் இதுவரை அமையவில்லை. நாவலுக்குச் சாகித்திய அகாடமி விருது கிடைத்தபோது சிலரால் (அதுவும் ஜெயமோகன் போன்றவர்களால்) மிகவும் விமர்சனம் செய்யப்பட்டது. சாகித்திய அகாடமி இடதுசாரிகளால் கைப்பற்றப் பட்டுவிட்டது என்றெல்லாம். உங்களின் இறுதியாக மீண்டும் என்னைக் கவர்ந்தது. இன்றைய தலைமுறை இளைஞர்கள் பல இயக்கங்கள் அவர்களது வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கத்தினை அறியாதவர்களாக உள்ளார்கள். இன்று சமூக வலைத்தளங்களில் வருவதையெல்லாம் உண்மையான வரலாற்று நிகழ்வுகளாக நம்புகிறார்கள். உங்களது இரண்டாவது காரணமும் உண்மை.. இயக்கங்களும் தங்களைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  2. Arumai bro 😎 conclusion is very true! people just need to travel to some states to realize how far we have come as state on many aspects! Yet a lot of work to be done!

    ReplyDelete
  3. அருமை சார் கண்முன்னே உங்களது உரையாடல் நடந்தது போல உணர்ந்தேன்..

    ReplyDelete