Sunday, 5 January 2020

யவன ராணி



                           யவன ராணி - சாண்டில்யன் 



சிறு வயதில் சாண்டில்யன் எழுதிய கடல் ராணி படித்து விட்டு, அவர் எழுதிய மற்ற நாவல்களையும் வாசிக்க நினைத்ததுண்டு. ஏன் சரித்திர கதைகளை எழுதுவதில் சிறந்தவர் கல்கியா அல்லது சாண்டில்யனா என எனது சகோதரர்களிடம் தர்க்கம் கூடச் செய்திருக்கிறேன். மீண்டும் அவரின் ஒரு நாவலை வாசிக்கலாம் என்று எண்ணிய போது எதைத் தேர்ந்தெடுக்க எனக் குழப்பம். மன்னன் மகள், கடல் புறா எனப் போய் கடைசியில் யவன ராணியைத் தேர்ந்தெடுத்தேன். 1960'ல் குமுதம் வாரஇதழில் தொடராக வந்த இரண்டு பாகங்களைக் கொண்ட பெரிய நாவல். 

யவனர்களின் (கிரேக்கர்கள்) ஆட்சியைத் தமிழ் நாட்டில் அமைக்க அவர்களில் போர் தலைவன் டைபீரியஸ் உதவியுடன் புகார் துறைமுகத்துக்கு வருகிறாள் யவன ராணி. மரக்கலம் தீப்பற்றியதால் கரையோரம்  மயக்க நிலையில் கிடக்கும் அவளைக் கதையின் நாயகன் படை உபதலைவன் இளஞ்செழியன் தூக்கிச் செல்கிறான்.  மயக்கம் தெளியும் ராணி அவன் மீது காதல் கொள்கிறாள். இளஞ்செழியனோ தன் முறைப்பெண்  பூவழகி மீது காதல் வயப்பட்டு பிறகு ஏற்பட்ட ஊடலால் அவளை எண்ணி ஏங்கிக் கொண்டிருக்கிறான். ஆனாலும் யவன ராணி மீது அவனுக்கு ஒரு ஈர்ப்பு (தடுமாற்றம்)  ஏற்படுகிறது. 

டைபீரியஸ் தமிழ்நாட்டில் நுழையும் நேரத்தில் இளங்கோவேள் என்பவன் சோழ மன்னன் இளஞ்சேட்சென்னியை கொன்றும், இளவரசன் திருமாவளவனைக் கைது செய்தும்  தான் மன்னனாகிறான். இந்த அரசியல் சதுரங்கத்தில் புகாரை ஆட்சி செய்யும் உரிமையை இளங்கோவேளிடமிருந்து பெறும் டைபீரியஸ் அதற்கு ராணியாக யவன ராணிக்கு முடிசூட்ட முயற்சி செய்கிறான். யவன ராணியோ  இளஞ்செழியன் மீது கொண்ட காதலால் அதற்கு உடன்பட மறுக்கிறாள். வஞ்சத்தால் இருவரையும் பிரிக்கும் டைபீரியஸ், இளஞ்செழியனுக்கு விஷம் கொடுத்து யவன நாடு செல்லும் கப்பலில் அனுப்பி விடுகிறான்.

அந்த பயணத்தில் பற்பல அனுபவங்களைப் பெறும் இளஞ்செழியன், அலீமா என்ற பெண்ணின் உதவியோடு தப்பித்து மீண்டும் தமிழ்நாடு திரும்ப முயற்சி செய்கிறான். இதனிடையே இளங்கோவேள், திருமாவளவனைத் தீயிட்டுக் கொல்ல முயற்சி செய்ய அதிலிருந்து காலில் காயங்களோடு தப்பிக்கிறான். காலில் ஏற்பட்ட தீக்காயம் காலை கருப்பாக்கி விட பூவழகியால் கரிகாலன் எனப் பெயர் பெறுகிறார். தமிழ் நாடு திரும்பும் இளஞ்செழியன், கரிகாலனோடு சேர்ந்து இளங்கோவேள் சேர, பாண்டியர்களின் பெரும்படையை தன் வியூகங்களால் எவ்வாறு   முறியடிக்கிறான்.  பின் யவன ராணி உதவியோடு எப்படி  டைபீரியசை வீழ்த்துகிறான்?  யவன ராணி, பூவழகி யாரை மனம் முடித்தான் என்பதுதான் நாவலின் முடிவு.. 


நாவல் முழுவதும் யவன ராணி என வருகிறதே தவிர அவளில் இயற்பெயர்  எங்கேயும் ஆசிரியரால் குறிப்பிடப்படவில்லை. சாண்டில்யன் நாவலுக்கே உரியப்  பெண்கள் மீதான வர்ணனைகள் நாவல் முழுவதும் நிரம்பி உள்ளது. அதுவும் யவன ராணி பற்றிய வர்ணனைகளைப் படிக்கும்போது எதாவது கால இயந்திர கடிகாரம் கிடைத்தால் உடனே சோழ நாட்டுக்குச் சென்று யவன ராணியைப் பார்த்து விட்டு வரவேண்டும் என்று தோன்றியது. துறவி பிரம்மனந்தர், இளஞ்செழியனுடனே பயணிக்கும் யவன வீரன் ஹிப்பாலஸ், சோழ ராணி ஆகும் அல்லி என சில கதாபாத்திரங்கள்  கதையின் ஓட்டத்தைத் தீர்மானித்தாலும் இளஞ்செழியனின் ஹீரோயிசம் அவர்களை மறைத்து விடுகிறது. 


MGR திரைப்படங்களின் கதைகளுக்கு சாண்டில்யனின் நாவல்களும் ஊன்றுகோலாக இருந்திருக்கலாம். கதாநாயகனே  அனுமான்ய வீரன் எந்த சூழ்நிலைகளையும் தனியாகச் சமாளிப்பவன். பல அழகான பெண்கள் அவன் மீது ஆசை கொள்வதும் பின்பு  அதில் சிலரை தன் சகோதரி ஆக்கிக்கொள்வது என. தற்போதைய அஜித் திரைப்படங்களிலும் யவன ராணியின் பாதிப்பு உள்ளது. உப படைத்தலைவன் இளஞ்செழியனை, மற்ற கதாபாத்திரங்கள் உயர்த்தி (buildup) அவ்வப்போது பேசுவது. 😎

இறுதியாக :

சாண்டில்யன் மீது பொதுவாக ஒரு கருத்து உண்டு கதையினை வளவள என்று பக்கம் பக்கமாக எழுதுவார் என. என்னால் அதனை இந்த நாவலை வாசிக்கும் போது உணர முடிந்தது. இருபது வருடங்களுக்கு முன்பு வாசித்திருந்தால் அப்போது யவன ராணி நாவல் என்னை மிகவும் கவர்ந்திருக்கலாம்.

Wednesday, 27 November 2019

வேதபுரத்து வியாபாரிகள்



                  வேதபுரத்து வியாபாரிகள் 
                                     - இந்திரா பார்த்தசாரதி



இந்திரா பார்த்தசாரதி எழுதிய எதாவது ஒரு நாவலைப் படிக்கலாம் என நினைத்து இந்த நாவலை வாங்க ஆர்டர் செய்தேன் ஆனால் ஸ்டாக் இல்லாததால் கிடைக்கவில்லை. கடைசியில் எங்களது வீட்டிலேயே (பெற்றோர்கள்) நாவல் இருந்தது. கல்கி வார இதழில் தொடராக வந்த நாவல்.

எந்த ஒரு பெரிய எதிர்பார்ப்பும் இல்லாமல்தான் வாசிக்க ஆரம்பித்தேன். அமெரிக்காவில் வசிக்கும் வேதபுரத்தை மூலமாகக் கொண்ட அபூர்வா என்கிற பெண்ணொருத்தி தன் தாய் நாடான வேதபுரத்துக்கு வருகிறாள். அங்கு உள்ள மக்களுடன் பழகி அந்த நாட்டை பற்றி புத்தகம் எழுதும் நோக்கத்துடன். வந்த இடத்தில் எதிர்பாராத விதமாக இங்குள்ள அரசியல்வாதிகளுடன் தொடர்பு ஏற்படுகிறது. அந்த தொடர்புகள் அவளுடைய நோக்கத்தை எப்படி திசை திருப்பி அவளை அரசியலில் தள்ளி, தலைவி ஆக்கியது என்பதுதான் கதை.

ஏதோ சுவாரசியமான கற்பனை கதை என நினைத்து விடாதீர்கள். ஆசிரியரின் நோக்கம் அதுவல்ல. கதை எழுதிய காலகட்டமான 1994-95  தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் நடந்த ஆட்சியின் அலங்கோலங்களைத்தான் கிண்டல் கலந்த நகைச்சுவையாக எழுதியுள்ளார். ஆசிரியர் அமெரிக்கா, தமிழ்நாடு, இந்தியா எனக் குறிப்பிடவில்லை எனினும்  வேதபுரம் - தமிழ்நாடு, இந்திரப்பிரஸ்தம் - இந்தியா என எளிதில் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

எந்த ஒரு அரசியல் கட்சியையோ, தலைவரையோ கிண்டல் செய்வது தன் நோக்கமில்லை என ஆசிரியர் கூறினாலும், நமக்கு அவர் கிண்டல் செய்யும் கட்சிகளையும் அதன் தலைவர்களையும் எளிதில் அடையாளம் காண முடிகிறது. பல உதாரணங்களை நான் எழுத நினைத்தேன் ஆனால் அந்த நையாண்டி கலந்த வரிகளை நீங்களே வாசித்தால்தான் மிகவும் ரசிக்க முடியும்.

இறுதியாக :

 இந்த மாதிரியான நாவல்களுக்கே உரியப் பிரச்சினைதான் இதிலும் உள்ளது. நாவலை எவ்வாறு முடிப்பது என்பதுதான். ஏனெனில் நிஜக் கதாபாத்திரங்களை பிரதிபலிப்பதால் அவர்கள் திருந்திவிட்டார்கள் என்றோ அல்லது அந்த பிரச்சினைகளுக்கு ஆசிரியரால் தீர்வுகளைத் தந்தோ முடிக்கமுடியாது. என்ன நாவலில் நையாண்டியாகச் சொல்லப்பட்ட  பல செயல்கள் இன்னும் தொடர்வதுதான் சோகம். 

      

Friday, 15 November 2019

அரும்பு அம்புகள்



                             அரும்பு அம்புகள் - கல்கி



அரும்பு அம்புகள் நாவல் கல்கி மறைந்த பின் அவரது மகனால் கண்டுபிடிக்கப்பட்டு கல்கி வார இதழில் தொடராக வந்தது. பல வருடங்களுக்கு முன்பு வாசித்த பொழுது என்னை மிகவும் கவர்ந்த நாவல். மீண்டும் ஒருமுறை வாசிக்க வேண்டும் என நினைத்தாலும் இப்பொழுதுதான் சந்தர்ப்பம் கிடைத்தது.

கல்கி இரு சிறுகதைகளை இணைத்து ஒரு திரைப்படத்துக்காக எழுதிய கதையாம். அதனால் கதையின் போக்கும் அப்படித்தான் உள்ளது. இரண்டாம் உலகப்போரினால் சென்னையை விட்டுச் செல்லும் கமலாவின் குடும்பத்தினர், சந்தர்ப்ப சூழ்நிலைகளின் காரணமாக இடையில் ஒரு ஊரில் தஞ்சம் புகுகிறார்கள். அவர்களுக்கு உதவி செய்யும் கல்யாணத்தின் மீது கமலாவுக்குக் காதல். ஆனால் கல்யாணத்திற்கு, அவனுக்கு மட்டும் அல்ல அந்த ஊரில் உள்ள நீதிபதி கோவர்த்தனனுக்கும் வக்கீல் பவானி மேல் ஒரு கண்ணு.

பவானியோ சிறையில் இருக்கும் தன் கல்லூரி காதலனை நினைத்து வாடிக் கொண்டிருக்கிறாள். இடையில் கமலாவை அவளது பெற்றோர், வயதான வீட்டு ஓனருக்கு மணமுடித்து வைக்க முயல அதில் குழப்பத்தை ஏற்படுத்துகிறான் கல்யாணம். சிறையிலிருந்து பவானியின் காதலன் தப்பித்து அவளைக் காண வர, அதனால் ஏற்படும் கலவரங்கள் எப்படி அனைவரையும் பாதித்தது, யார் யாரைத் திருமணம் செய்தார்கள் என்பதுதான் முடிவு..

நாவலை இப்பொழுது வாசித்தபின், அது முன்பு வாசித்தபோது தந்த உணர்வை அப்படியே அளிக்கவில்லை. சிவகாமி மற்றும் ரோகிணியின் காதல் .... பதிவில் அப்பொழுது கூறிய என்னுடைய கருத்தை மாற்றிக் கொள்கிறேன்.  காரணம் எளிமையானது.. நமது மனதின் முதிர்ச்சி மற்றும் வாசிப்பின் நிலைகள் மேம்பட்டிருப்பதும்தான். ஆனாலும் சினிமாத்தனமான திருப்பங்கள் நிறைந்த ஒரு சுவாரசியமான கதைதான். அதைத் தவிர ரொம்ப பெரிதாக ஒன்றும் இல்லை.

இறுதியாக :

    பவானி கதாபாத்திரத்தில் கொஞ்சம் பொன்னியின் செல்வன் நந்தினியின் பாதிப்பு இருப்பது போல எனக்குத் தோன்றியது. பவானியின் ஆளுமை மற்றும் அழகைக் கண்டு அவளிடம் பழகும் ஆண்கள் அனைவரும் கொஞ்சம் தன்னிலை மறந்து தடுமாறுவது.