Monday, 26 October 2020

வேரில் பழுத்த பலா

 

         வேரில் பழுத்த பலா - சு. சமுத்திரம்



சாகித்ய அகாடமி விருதுபெற்ற நாவல்களை வாசிக்கும் வரிசையில் இந்த நாவலையும் வாங்கினேன். சு. சமுத்திரம் எழுதிய "வேரில் பழுத்த பலா", "ஒரு நாள் போதுமா"  என்ற இரண்டு குறுநாவல்களின் தொகுப்புதான் இந்த நூல். 

வேரில் பழுத்த பலா:

    மத்திய அரசின் அலுவலகங்களுக்குத் தேவையான பொருட்களைக் கொள்முதல் செய்யும் துறையில் உயர் அதிகாரியாக பணிபுரியும் சரவணன் தரம் குறைந்த பொருட்களைக் கொள்முதல் செய்து ஊழலில் ஈடுபட்ட தன்  அலுவலர்களைக் கட்டுப்படுத்த முயல்கிறான். அலுவலகத்தையும், அலுவலர்களையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கான்ட்ராக்டர் செளரிராஜன் தரும் நெருக்கடிகளை, சுற்றி நடக்கும் சதிகளை எதிர்கொள்வதுதான் நாவலின் சாராம்சம். சரவணனின் அம்மா, அண்ணி மற்றும் தங்கையின் பாத்திரப்படைப்பு யதார்த்தம். அலுவலகத்தில் அவனுக்கு உதவிகள் செய்து இறுதியில் காதல் வயப்படும் அன்னம் தனித்துத் தெரிகிறாள். 

       அடித்தட்டில் வாழும் மக்களின் அவலங்களில் ஒன்றாக, அவர்கள் படித்து மேலுயுயர்ந்து வந்தாலும் வேலைத்தளங்களிலும், சமூகச் சூழலிலும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் ஏராளம். சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் சாதிய உளவியல் எண்ணங்களைப் புலப்படுத்தினாலும் சாதிய போக்கு வேறுபாடுகளைப் பேசும் கதையில் அவர்களுக்கு உதவி செய்பவர்கள் அனைவரும் ஒரே சாதியாகச் சொல்லப்பட்டிருப்பது கொஞ்சம் நெருடல். அரசு அலுவலகங்களில் நேர்மைக்கு என்ன விலை, நீதியின் குரல்வளை எப்படியெல்லாம் நெரிக்கப்படுகிறது, அலுவலகங்களில்  தாழ்த்தப்பட்ட பெண்களின் நிலை என்ன என்பதை அப்பட்டமாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.


ஒரு நாள் போதுமா: 

          வேலுவும் அவன் மனைவி அன்னவடிவும் பிழைப்பு தேடி கிராமத்தை விட்டு சென்னைக்கு வருகிறார்கள். சித்தாள் வேலை செய்யும் தாயம்மாள் உதவியால் கட்டிடத் தொழிலாளியாக வேலை செய்கிறார்கள். சிமென்ட் மூட்டை பாரத்தை அதிகமாக  அவன் மீது கான்ட்ராக்டர் ஏற்றிவிட அதனால் உயிரை இழக்கிறான். அதற்காக நியாயம் கேட்டு போராட்டத்தை அன்னவடிவு வீரத்தோடு முன்னிறுத்துகிறாள்.

     அதிகாரவர்க்கத்தினரால் பாட்டாளி மக்கள் எவ்வாறெல்லாம் நசுக்கப் படுகிறார்கள் அவர்களின் உரிமைகள் எப்படியெல்லாம் பறிக்கப்படுகிறது என்பதை சு. சமுத்திரம் பதிவு செய்கிறார். மழைத் தவறி தண்ணீர் இல்லையெனில் முதலில் பாதிக்கப்படுவது விவசாயி அல்ல விவசாய கூலிதான். கட்டிட மற்றும் அன்றாட கூலிகளின் நிரந்தரமில்லா வேலை நிலைமைகளையும், அவர்களின் பொருளில்லா வாழ்வின் அவல நிலைமையையும் சுட்டிக்காட்டுகிறார். அவர்களின் எந்த அடிப்படை வசதியும் இல்லாத வாழ்வியல் பகுதிகள், தகுந்த இழப்பீடுகளைக் கொடுக்காமல் மூடி மறைக்க நினைக்கும் முதலாளிகளின் நயவஞ்சக தன்மைகளுக்குப் போராட்டமே தீர்வு என்கிறார். 

     இரண்டு குறுநாவல்களுமே வாசிப்பதற்கு எளிமையாக எழுதப்பட்டவைதான். அதனால் பெரிய இலக்கியத்தை வாசித்த பிரமிப்பை தரவில்லை எனினும் அவை அலசி பேசும் விஷயங்கள் கவனிக்கப்பட வேண்டியவை.

இறுதியாக :

      சாகித்ய அகாடமி விருதை இந்நாவல் கொடுத்தற்காகப்  பல விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டது நாவல் மீதும் சு. சமுத்திரம் மீதும். வணிக எழுத்தாளர்களின் நாவல்கள் வாசிக்க எளிமையாக இருந்தால் அதை சில பக்கங்களை வசிப்பதற்குள்ளே எப்படி இலக்கியவாதிகளுக்குப் போர் அடிக்குமோ, அது போல் நேரிடையாகச் சொன்னாலே குழம்பிவிடும் தத்துவங்களை எளிமையான தர்க்கக் கட்டமைப்பில் சொல்லாமல், கவித்துவமான இலக்கிய நடையில் குறியீடுகளைக் கொண்டு விரித்துரைப்பது மற்றவர்களுக்குப் போர் அடிக்கலாம். அதனால் விருதுகள் எல்லோருக்கும்  செல்லலாம். 

Friday, 16 October 2020

சுளுந்தீ

 

                       சுளுந்தீ - இரா. முத்துநாகு


  சில நண்பர்களின் பரிந்துரையால் சுளுந்தீ நாவலை வாங்கி வாசித்தேன். கதைக்களம் 18'ஆம் நூற்றாண்டில் மதுரை நாயக்கர் காலத்தில் நடக்கும் சம்பவங்களைக் கொண்டு பின்னப்பட்டிருந்தாலும் ஆண்ட மன்னர்களைப் பற்றிப் பேசாமல் சாமானிய, ஒதுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலிக்கிறது. அதுவும் அரண்மனை சூழ்ச்சிகள், அதிகார வர்க்கத்தைப் பேசும் நாவலில் நாவிதனை மையமாகக் கொண்டு கதை நகர்வது  எனக்கு ஆச்சரியத்தை அளித்தது.

     18'ஆம் நூற்றாண்டில் மதுரை மன்னரின் கீழ் உள்ள கன்னியவாடி (இப்போதைய தேனி மாவட்டம்) அரண்மனையார் கதிரியப்ப நாயக்கர். அரண்மனை நாவிதனான ராமன் பன்றிமலை சித்தருக்குச் சீடனாகி மருத்துவத்தைக் கற்று மகாபண்டுவனாகிறான். அதனால் கன்னியவாடி அரண்மனையில் தவிர்க்க முடியாத அங்கமாகும் அவன் மீது தளபதி முத்து இருளப்ப நாயக்கர் எரிச்சல் கொள்கிறார். ராமன் தனது மகன் மாடனை நாவிதத்திலிருந்து விலக்கி அரசுப்படை வீரனாக்க முயல அதற்குத் தளபதி ராமனின் முட்டுக்கட்டை போடுகிறார். இளைய ராணியின் உள்ளங்கை தோல் வெடிப்புக்கு மருந்து தயாரிக்கும் பொழுது நடக்கும் விபத்தில் ராமன் இறக்க, அவன் மனைவி வல்லத்தாரையோ பார்வையை இழக்கிறாள். அதன் பின்பும் அடங்காமல் படை வீரனாக முயலும் மாடன் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன, அரண்மனை சதிகள், உள்குத்துக்களை முறியடித்தானா என்பதே நாவலின் முடிவு.

         குலவிலக்கானவர்களை ஒன்று சேர்த்து கிணறு வெட்டி, அந்த பாசனத்தைக் கொண்டு விவசாயத்தை விரிவாக்கும் மருதமுத்து ஆசாரி, மாடன் மீது மெல்லிய காதல் கொண்டு அதனை வெளிப்படுத்தாமலே அவனுக்கு உதவிகள் செய்யும் அனந்தவல்லி, கன்னிவாடி மடத்தின் குலகுரு அருணகிரி, ஏசு சபை ஊழியரான பாதிரியார் ஆல்வரேசு. எல்லாவற்றுக்கும் மேல் பன்றிமலை சித்தர்  என்று வடிவமைக்கப்பட்ட கதாபாத்திரங்கள் நம்மைக் கதையோடு கட்டிப்போடுகின்றன. பண்டுவத்தில் செந்தூரம் தயாரிக்க உதவும் பொருட்களைப் பயன்படுத்தி அதிகாரத்தை இழந்த பாண்டிய அரசு பிரதிநிதிகள் வெடிமருந்து தயாரிப்பதை அறிந்த நாயக்கர் அரசு பல பண்டுவர்களை கொன்று குவித்தது வரலாற்றுச் சோகம். நாயக்கர் அரசர்களின் குல மரமான புளியமரத்தின் கொட்டைகளை மக்கள் பஞ்சகாலத்தில் உண்டு திடகாத்திரமாக இருந்ததை அறிந்த ராணி மங்கம்மா சாலை ஓரம்தோறும் புளியமரத்தை நடவு செய்யச் சொல்லியுள்ளார். கிடாரிக்குப் பிறக்கும் முதல் கன்றுவை ஏன் கோவிலுக்கு நேர்ந்து விட்டு விடுகிறார்கள் என்பதை அருமையான கிளைக்கதை  மூலம் ஆசிரியர் விளக்குகிறார்.

            செந்தூரம் தயாரிக்கும் முறை, வெடிமருந்து தயாரிக்கும் முறை, அந்தக் கால பண்டுவ குறிப்புகள் மட்டுமில்லாது பல்வேறு நுண் தகவல்கள் நாவலெங்கும் படர்ந்து விரிந்து கிடக்கிறது. பண்டுவம் என்னும் வைத்தியமுறை நுணுக்கங்களை அந்த காலத்தில் நாவிதர்களே அறிந்துள்ளனர். அவர்களின் மனைவிகள் மருத்துவச்சியாக வேலை செய்துள்ளனர்.   காலப்போக்கில் ஒடுக்கப்பட்ட மக்கள் எவ்வாறு ஒதுக்கப்பட்ட மக்கள் ஆகிறார்கள் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்கிறார் இரா. முத்துநாகு. நாயக்கர்கள் ஆட்சிக்காலத்தில் விஜயநகர குடிகள் இடம்பெயர்ந்து தமிழ்நாட்டில் குடியேற அதனால் தமிழ் மற்றும் தெலுங்கு பேசும் மக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல்கள். பூர்விக குடிகள் பலர் குலநீக்கம் செய்யப்பட்டுத் துரத்தப்பட்ட நிகழ்வுகளைக் குறிப்பிடும் கீழ்க்கண்ட வரிகளைக் கடப்பதற்கு மனம் கனக்கிறது.

"அரண்மனை அதிகாரப் போட்டிக்குக் குடிகள் பலிகடா ஆவதும், அரசுக்கு வேண்டியவர்களைக் குடியமர்த்துவதும், பூர்விகக் குடிகளை அழித்தொழிப்பதும், வரலாறு தொட்டு நீதியாகவே இருக்கிறது"


           நாவலின்  முடிவு கொஞ்சம் யதார்த்தத்தை விட்டு விலகிச் சென்றது போல் எனக்குத் தோன்றியது. ஆண்டவர்களின் பெருமையைப் பேசாமல் நாவல் சாமானியர்களின் வாழ்க்கையைப் பற்றிப் பேசினாலும் இதில் எவ்வளவு வரலாற்று உண்மைத்தன்மை கலந்துள்ளது என்பது இது போன்ற அனைத்து நாவலுக்குள்ள பிரச்சினைதான். மிக அதிகமான நுண்ணறிவு தகவல்கள் ஆரம்பத்தில் வாசிக்கக் கொஞ்சம் அயர்வைத் தந்தாலும் இறுதியில் ஒரு நல்ல நாவலை வாசித்த உணர்வையே தருகிறது. 

இறுதியாக :

எண்ணெய் துணியைக் கொண்டு தயாரிக்கப்பட்ட தீவட்டிப் பயன்பாட்டுக்கு முன்பே சுளுந்து மர குட்சியையே வெளிச்சம் தரப் பயன்படுத்தியதாக ஆசிரியர் கூறுகிறார். நெருப்புவை ஆயுதமாகப் பயன்படுத்துவதைத் தடுக்க சுளுந்தீக்கு நாயக்கர்களின் அரசு தடை விதித்துள்ளது. முற்காலத்தில் வெளிச்சம் தந்து இன்று பலருக்கும் தெரியாமல் போன சுளுந்தீக்கு ஆசிரியர் வெளிச்சம் கொடுத்துள்ளார்.

Friday, 25 September 2020

அன்னா கரீனினா

 

            அன்னா கரீனினா  - லியோ டால்ஸ்டாய்


   எவ்வளவு நாட்கள்தான் உள்ளூர் நாவல்களையே தேடிப்பிடித்து வாசித்துக்கொண்டிருப்பது சற்று வெளியையும் சென்று பார்க்கலாமே என்ற எண்ணத்தினால் உலக இலக்கியத்தைத் தெரிந்தவர்களின் பேச்சில் சரளமாகப் புரளும் லியோ டால்ஸ்டாயின் உலகத்தின் மிகச்சிறந்த நாவலாகப் பெரும்பான்மையானவர்களால் கொண்டாடப்படும் அன்னா கரீனினா நாவலை வாங்கி விட்டேன்.  ஆனால் வாங்கிய பின் நாவலின் நீளம்தான் (மொத்தம் எட்டு பாகங்கள்) கொஞ்சம் தயக்கத்தைக் கொடுத்தது அதனை வாசிக்கத் தொடங்க.... லியோ டால்ஸ்டாய் இந்த நாவலை 1873' ஆம் ருஷ்ய மொழியில் எழுத ஆரம்பித்துள்ளார். நான் வாசித்தது நா. தர்மராஜனின் மொழிபெயர்ப்பு.

    தனது சகோதரன் ஆப்லான்ஸ்கி மற்றும் அவரது மனைவி டாலிக்கும் இடையே ஏற்பட்ட ஊடலைத் தீர்த்துவைக்க அன்னா பீட்டர்ஸ்பர்க்கிலிருந்து மாஸ்கோ நகருக்கு வருகிறாள். அவளோடு இரயிலில் இராணுவத்தில் வேலை செய்யும் பிரபு விரான்ஸ்கியின் தாயாரும் ஒரே பெட்டியில் பயணிக்கிறாள். தாயை வரவேற்க வந்த விரான்ஸ்கியை அன்னா சந்திக்கிறாள். கண்களோடு கண்கள் பேசி ஒருவித ஈர்ப்பில் இருவரும் விழுகிறார்கள். டாலியின் சகோதரி கிட்டி மீது கொண்ட காதலால் கிராமத்திலிருந்து மாஸ்கோ வரும் லெவின் அவளிடம் தன் விருப்பத்தைத் தெரிவிக்க அவளோ, அவளது தாயின் விருப்பத்தின்படி விரான்ஸ்கியை மணக்கும் நோக்கத்தோடு மறுத்து விடுகிறாள். ஆனால் விரான்ஸ்கியோ அன்னாவை பார்த்தபின் அவள் மீது கொண்ட மோகத்தால் கிட்டியை மறந்து அன்னாவை துரத்திக்கொண்டு பீட்டர்ஸ்பர்க் செல்லுகிறான். அன்னாவோ தனக்கு அரசாங்கத்தில் முக்கிய வேலையிருக்கும் கரீனின் என்பவருடன் திருமணமாகி எட்டு வயதில் செரோஷா என்ற மகனும் இருப்பதைக்  கூறி அவனிடமிருந்து விலகுகிறாள்.

          அன்னாவை விடாமல் துரத்தி அவளது மனதையும் கரைத்து அவளையும் அடைகிறான் விரான்ஸ்கி.  இதனால் கர்ப்பம் அடையும் அன்னா, கரீனினனிடம் அனைத்தையும் கூறித் தான் விரான்ஸ்கியோடு வாழ விவாகரத்து தருமாறு வேண்டுகிறாள். கரீனினனோ தன்னுடைய சமூக அந்தஸ்தைப் பறிகொடுத்து விடாமலிருக்க அவளை மன்னித்து ஏற்றக்கொள்வதாகக் கூறுகிறான். மகப்பேறு தொடர்பான கடுமையான காய்ச்சலில்  உடல் குன்றியிருக்கும் பொழுது அன்னா இறந்துவிடுவாள் என நினைத்து விரான்ஸ்கி தற்கொலைக்கு முயன்று தோற்கிறான். அதிலிருந்து மீளும்  விரான்ஸ்கி இராணுவத்தில் தனக்குக் கிடைக்கும் பதவி உயர்வைத் துறந்து அங்கிருந்து வெளியேறி அன்னாவுடன் வெளிநாடு செல்கிறான்.

          விரான்ஸ்கியால் நிராகரிக்கப்பட்ட கிட்டி  அதனால் மனம், உடல் பாதிக்கப்பட்டு மருத்துவச் சிகிச்சைக்காக ஜெர்மனி செல்கிறாள். அங்குக் கிடைக்கும் அனுபவங்களால் மனப்பக்குவமடைபவள் மீண்டும் ருஷ்யா வந்து தன் சகோதரி டாலியின் உதவியால் லெவினை மணக்கிறாள். வெளிநாட்டிலிருந்து மீண்டும் ருஷ்யா திரும்பும் விரான்ஸ்கி மற்றும் அன்னா ஒரு கிராமத்தில் தங்களுடைய வாழ்க்கையை அமைத்துக்கொள்கிறார்கள். ஆனால் அன்னவோ தன்னுடைய மகன் செரோஷாவை எண்ணி வாடுகிறாள். கரீனின் அவளுக்கு விவாகரத்து தர மறுக்க, அவளுடைய சமூக அங்கீகாரத்தை எண்ணி வருந்துகிறாள். அவளில் மனதில் அமைதி தேய்ந்தது கொண்டே வருகிறது. அதனால் அவள் மனதில் ஐயம் குடி கொண்டு விரான்ஸ்கி மீதும் நம்பிக்கை இழந்து சந்தேகிக்கிறாள். அனாவசியமாக விரான்ஸ்கி அவள் கட்டுப்படுத்த முயல அவர்களிடையே சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் மனஸ்தாபம் நிகழ்கிறது. அதுபோல் ஒரு சிறிய ஊடலுக்குப் பின் தன் தாயைப் பார்க்கச் சென்ற விரான்ஸ்கியை தொடரும் அன்னா உச்சக்கட்ட மனக்குழப்பத்தில் வெறுப்பின் உச்சத்தில் எடுக்கும் முடிவுதான் நாவலின் முடிவும் கூட. 

                   அன்னாவை மட்டுமே நாவல் முன்னிலைப் படுத்தாமல் லெவின், கிட்டியின் காதல் வாழ்வும் இணையாகச் சொல்லப்பட்டுள்ளது. மேலும் லெவினின் சகோதரர்களின் கிளைக்கதைகளும் உள்ளது. வெறும் காதல் கதையாக மட்டுமில்லாமல் கதை நகரும் தளத்தினை பயன்படுத்தி அன்றைய  மாஸ்கோ, பீட்டர்ஸ்பர்க் நகரங்கள், ருஷ்யாவின் கிராமங்களை கண்முன்னே நிறுத்துகிறார். அரசியல் சூழ்நிலை, நகர மற்றும் கிராம மக்களின் வாழ்க்கைத்தரத்திற்குள்ள வேறுபாடு, சமய நம்பிக்கைகள், விவசாயிகளின் பிரச்சினைகள் என நாவல் அலசும் விஷயங்கள் எண்ணிலடங்காதவை. பெண்களின் நுட்பமான உணர்வுகளை, உணர்ச்சிகளை, அவர்களின் மனவோட்டங்களை டால்ஸ்டாய் அப்பட்டமாக வெளிப்படுத்துகிறார். கதையின் ஊடாக பயணிக்கும் லெவினின் பழக்க வழக்கங்களாக, கருத்துக்களாகத் தனது எண்ணங்களைப் பதிவுசெய்வதாகத் தோன்றியது. கிட்டத்தட்ட நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முந்தைய ஆண், பெண்களின் உளவியலை நாவல் பேசினாலும் இன்னும் பல ஆண்டுகள் கடந்து யார் வாசித்தாலும் அவரின்  நெஞ்சையும் நெருடும். 

  நாவலின் பரந்த பின்னணி, நிகழ்வுகளின் விசாலமான சித்தரிப்பு, யதார்த்தமான உரையாடல்கள், கதாபாத்திரங்களின் பன்முகத்தன்மை, விவாதிக்கும் சமூகப் பிரச்சினைகள் என லியோ டால்ஸ்டாயின் அன்னா கரீனினா நாவல் நிலையிலிருந்து விலகி அமரகாவியமாகிறது. குடும்பத்தில் தோன்றும் ஒரு சிறிய பிரச்சினை குடும்ப உறவுகளுக்கிடையே புயல், சூறாவளியெல்லாம் தோற்றுவித்து எவ்வாறு சின்னாபின்னமாக்குகிறது. டால்ஸ்டாய்  பேசும் மனித உறவுகள், மனித நேயம் அன்னா கரீனினாவை வாசிக்கும் அனைவரையும் முதல் வாசிப்பிலே கவரும்படி உள்ளது. வாசிப்பின்போது நீங்கள் அறிந்த, பழகிய மனிதர்களைப் பற்றிய எண்ணங்கள் மனதில் தோன்றலாம். காரணம் மனிதர்களின் குணநலன்கள், செயல்பாடுகள், உறவின் சிக்கல்கள்  பல நூற்றாண்டுகளைத் தாண்டியும், புவியியல் எல்லைகளைக் கடந்தும் இன்றும் மாறாமல் இருப்பதுதான். வாசிப்பை நேசிக்கும் அனைவரும் தவற விடாமல் கட்டாயம் வாசித்தனுபவிக்க வேண்டிய காவியம் அன்னா கரீனினா.  

        வாசித்து முடிக்கும் போது பொதுவாகப் பெரிய நாவல்கள் ஒருவித ஆழ்ந்த அமைதியை, நெகிழ்வை, கனத்த மனதை உண்டாக்கிவிடும். நாவலின் கதாபாத்திரங்களுடன் ஒன்றாய் பயணித்து, அவர்களின் வாழ்க்கையின் ஊடே கூடி வாழ்ந்து விட்டு, சட்டென்று அவர்களைப் பிரிவதைப் போன்ற உணர்வின் விளைவாய் இருக்கலாம். அன்னா கரீனினா என் மனதில் ஏற்படுத்திய தாக்கம் விலக சில நாட்கள் என்ன?  சில வாரங்களே ஆகலாம். 

இறுதியாக :

     அன்னா கரீனாவை திரைப்படமாக இதுவரை  பத்திற்கும் மேற்பட்ட முறை பல்வேறு மொழிகளில் எடுத்துள்ளார்கள். ஆனால் எதுவுமே வெற்றி பெறவில்லையாம். டால்ஸ்டாயின் நயமிக்க இலக்கிய சுவையை, அழகான கவித்துவத்தை யாராலும் திரையில் முழு உணர்வுப்பூர்வமாகக் கொண்டு வர முடியாது என்பதே என் எண்ணம்.