Tuesday 5 February 2019

துப்பறியும் சாம்பு


                                 தேவன் - துப்பறியும் சாம்பு


   
தேவன் எழுதிய துப்பறியும் சாம்பு கதையை பத்தி நிறையக் கேள்வி பட்டிருக்கிறேன் சின்ன வயது முதல். ஆனால் வாசிக்கச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. சில வருடங்களுக்கு முன்பே இந்தப் புத்தகத்தை வாங்கினாலும் வாசிக்கவே இல்லை. கடைசியில் இப்பொழுதுதான் வாசித்து முடித்தேன்.

       அசட்டுச் சாம்பு எப்படித் துப்பறிந்தார் என்பதுதான் கதை.. இது முழுநீள நாவல் அல்ல.. சிறு சிறு கதைகளின் தொகுப்பு. சாம்பு துப்பறிந்தார் என்பதை விட அவர் அசட்டுத்தனமான செய்கைகள் எப்படி குற்றவாளிகளை பிடிக்க உதவியது என்பதை நகைச்சுவையாக எழுதியுள்ளார் ஆசிரியர் தேவன்   (ஆர். மகாதேவன்).

      இந்தக் கதைகள் பெரியவர்களுக்காக எழுதப்பட்டிருந்தாலும் அனைவரும் வாசிக்கும் படி மிகவும் எளிமையாக உள்ளது. படக்கதைகளாக வந்திருந்தால் இன்னும் அதிகமாகச் சிறுவர்களை கவர்ந்திருக்கும். படக்கதையாகத் துப்பறியும் சாம்பு கிழக்கு பதிப்பகம் மூலம் வர இருப்பதாகப் படித்தேன் ஆனால் அவர்கள் வெளியிட்டார்களா எனத் தெரியவில்லை.

 சாம்பு கதாப்பாத்திரத்தின்  வழுக்கைத் தலை மற்றும் பெரிய மூக்கு தோற்றம், அவரைப் பார்ப்பவர்கள் அசடு போன்று இருப்பதாகக் கருதக்கூடிய வகையில் வடிவமைத்திருப்பார்.  அதுவே கதையின் வெற்றிக்கு பெரிய காரணம் என நினைக்கிறேன். மேலும் சாம்பு அவருக்கு தெரியாமலேயே அந்தக் குற்றத்தினை அவர் கண்டுபிடித்திருப்பார். காக்கா உக்கார பனம்பழம் விழுந்த கதையின் டெம்ப்ளேட்தான் எல்லாக் கதைகளிலும். இறுதியில் தான் குற்றத்தைக் கண்டுபிடித்துவிட்டேன் என்பது அவருக்கே தெரியும்.

 ஒவ்வொரு கேஸிலும் சாம்புக்கு அதிருஷ்ட தேவதை எப்படியோ சமயத்தில் வந்து உதவுவதுதை ஓரளவுக்கு நம்பும்படியாகவே அமைத்திருப்பார் தேவன். இது அவரின் சாமர்த்தியம். அந்தச் சாமர்த்தியத்தை எல்லாக் கதைகளிலும் காண்பித்திருக்கிறார் தேவன். மொத்தம் 50 கதைகள். சாம்புவுக்கு, வேம்புவுடம் திருமணம் ஆவது... அவர்களுக்கு சுந்து மற்றும் சுப்பு எனக் குழந்தைகள் பிறப்பது என சாம்புவின் வாழ்க்கையையும் கதையின் ஓட்டத்தோடு அமைத்திருப்பது சிறப்பாக உள்ளது.

இந்தக் கதைகளை பலமுறை படிக்கலாம். தெரிந்த முடிவுகள்தான் எனினும் முடிவுகள் ஒரு ஆனந்தத்தையே ஏற்படுத்தும்.

 கதை எழுதுபட்ட காலகட்டமான 1950 ல் சாம்புவை தெரியாதவர்கள் யாருமே கிடையாது எனக் கேள்விப்பட்டு உள்ளேன். இது Y.G மகேந்திரன் சாம்புவாக நடித்து  தொலைக்காட்சி தொடராகவும் வந்து உள்ளது. நான் பார்த்ததில்லை ஆனால் YouTubeபில் இப்போதுதான் சில எபிசோடுகளை பார்த்தேன்.


இறுதியாக :

 ஒரு வெகுளியைச் சமய சந்தர்ப்பங்கள் ஜீனியஸ் ஆக தோன்றச் செய்கிறது. அது எப்படி நடக்கிறது நகைச்சுவையாகவும் கொஞ்சம் நம்பும்படியும் கூறியுள்ளார். புத்தகத்தின் பல அத்தியாயங்கள் மிக நன்றாக உள்ளது. அத்தியாயங்களின் ஒரே மாதிரியான முடிவுகள் புத்தகத்தை ஒரே கோர்வையாக வாசிக்கும்போது சற்றே அலுப்பு தட்டுகிறது.

ஒருவேளை நாவலாக வாசிக்காமல் வாரம், வாரம் வாசித்திருந்தால்  இப்படித் தோன்றாமல் இருந்திருக்கலாம். நீங்கள் யாராவது முன்பே வாசித்திருந்தால், உங்களுக்குப் பிடித்த சாம்பு கதைகளை பட்டியலிடுங்கள்...


2 comments:

  1. I read this book..when i was kid and it's my favorite story

    ReplyDelete
  2. Y.G மகேந்திரன் துப்சாபறியும் சாம்புவாக நடித்த தொலைக்காட்சி தொடர் is one of my childhood favorites. Agreed that episode a week would have made a big difference to reading/ watching 🤗

    ReplyDelete