Thursday 14 March 2019

மானுடம் வெல்லும்



                                    பிரபஞ்சன் - மானுடம் வெல்லும்



பல வருடங்களுக்கு முன்னாள் தினமணிக் கதிரில் தொடர்கதையாக வந்தது. அப்பொழுது நான் வாசிக்க வில்லை. பல ஆசிரியர்கள்  வெவ்வேறு காலகட்டங்களில் எழுதிய  நிறைய சரித்திரக் கதைகளைப் படித்திருக்கிறேன். அந்த கதைகள் எல்லாம் பொதுவாக குறைவான உண்மை சம்பவங்களின் தொகுப்பைக் கொண்டு மிகுந்த கற்பனைகளைப் புகுத்தி சுவாரசியமாக  எழுதப்பட்டவை.  மன்னர்களையோ அல்லது கதாநாயகன் மற்றும் நாயகிகளைச் சுற்றியே
புனையப்பட்டிருக்கும். சாமானிய மனிதர்களைப் பற்றியோ, அவர்களின் வாழ்க்கை முறை பற்றியோ எதுவும் இருக்காது. நமக்குக் கிடைத்த பண்டைய கால குறிப்புகள், கல்வெட்டுக்களில் அவை அதிகமாக இடம் பெறாததும் ஒரு காரணமா இருக்கலாம்.


ஆனால் பிரபஞ்சன் எழுதிய மானுடம் வெல்லும் நாவல், பாண்டிச்சேரியைப்  பிரெஞ்சுக்காரர்கள்  ஆண்ட பொழுது அவர்களிடம் வேலை செய்த ஆனந்தரங்க பிள்ளையின் நாட்குறிப்பு இந்த நாவலுக்குப் பலமான அஸ்திவாரமாக இருப்பதால், உண்மைக்கு மிகவும் அருகில் உள்ளது. நம் மனதில் மன்னர் என்றாலே ரொம்ப பெரிய ராஜ்ஜியம் இருக்கும் எனத் தோன்றும். ஆனால் திருச்சியை ஒரு மன்னரும், தஞ்சை வேறு மன்னரும் ஆள்வது நம் எண்ணங்கள் மற்றும் கற்பனைகள், உண்மைக்கு வெகு தூரத்தில் இருப்பது புரிந்தது. 

1750 களின் பிற்பாதியில் பாண்டிச்சேரியை குவர்னர் துய்மா மற்றும் அதிகாரிகள் எவ்வாறு  நிர்வாகம்  செய்தார்கள் என்பதை ஆனந்தரங்க பிள்ளையின் கண்ணோட்டத்தில் விவரிக்கப் படுகிறது. அந்த காலகட்டங்களில் நம்மிடம் இருந்த தாசி முறை,  ஜாதி வேற்றுமை, பலதாரமணம், அரசர்கள் அழகான பெண்களைக் கவர்வது, அரசியல் படு கொலைகள்  போன்ற கசப்பான உண்மைகளை விவரிக்கிறார்.

மக்கள் அனைவரும் கழிவறை கட்ட ஆணையிடுவது (கடற்கரையோரம் உட்கார்ந்து கக்கூஸ் போகத் தடை)மதுவைத் தடை செய்வதுபிரெஞ்சுக் காரர்களைப் பார்த்து அவர்களைப் போல் நடக்க விரும்பும் நபர்கள் ஆகிய சம்பவங்கள் சுவாரசிய படுத்துகிறது. அந்த காலத்திலே மத மாற்றங்களால் நடந்த உரசல்கள். சோழ, பாண்டிய ராஜ்ஜியங்கள் சுருங்கிய அல்லது அழிந்த பின் தமிழ்நாடு எவ்வாறு மராட்டிய மற்றும் நவாபுகளின் கையிலிருந்தது எனத் தெரிந்து கொள்ளலாம். போரின் கொடுமைகளை விஞ்சி நிற்கக் கூடியதாக, போர் வீரர்களின் அழிப்பு வெறி (கொள்ளைபெண்களைக் கொடுமைப் படுத்துவது) போர் முனையையும் தாண்டி விரிவடைவதையும் இந்நாவல் காட்டுகிறது.
துரோகங்கள் எப்படி அந்த காலத்திலே பணம் மற்றும் பொருட்களால் எப்படி நடைபெற்றது எனப் புரிய முடிகிறது. 

கதையின் சின்ன பலவீனம் கொஞ்சம் கோர்வையாகக் கதை நகராமல் இருப்பதுதான். சாமானிய  மற்றும்   அந்த காலத்தில் அடிமட்ட மக்களின் வாழ்க்கையினை சொல்ல சில கிளைக்கதைகள் வருகிறது. அதில் வரும் கதாபாத்திரங்களைப் பற்றி பிறகு வருவதே இல்லை. அதனால் கதையில் நிறையப் பாத்திரங்கள் அவ்வப்போது வருவதும் போவதுமாக இருப்பது கொஞ்சம் குழப்பத்தை ஏற்படுத்துவது மட்டும் அல்லாது மையக் கதையை விட்டு விலகிப் போவது போலவும் தோன்றுகிறது. 

இறுதியாக :

      நமது முன்னோர்களின்  வாழ்க்கைமுறை மற்றும், சமூக வரலாறுகளைத் தெரிந்து கொள்ள விரும்பும் அனைவரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய நாவல். அன்றைய சமூக வரலாற்றைப் பார்த்தால், பல விஷயங்களில் நாம் எவ்வளவு தூரத்தைக் கடந்து வந்திருக்கிறோம் எனப் புரியும்.

கொசுறு :

ஆனந்தரங்கம் பிள்ளை இந்தியாவின் பெப்பீசு எனவும் நாட்குறிப்பு வேந்தரெனவும் போற்றப்படுகிறார். இவர் 1736 முதல் 1761 வரை ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகள் எழுதிய நாட்குறிப்புக்கள், அவர் மறைந்து கிட்டதட்ட 85 ஆண்டுகள் கழித்துக் கிடைத்தன. அதன் மூலம் அக்காலத்தில் நடந்த சமூக மாற்றங்கள், அரசியல் நிகழ்வுகள் போன்றவற்றினை நாம் தெரிந்து கொள்ள முடிகிறது. நானும் 1993 முதல் நாட்குறிப்பு எழுதிக் கொண்டிருக்கிறேன்.. பிற்காலத்தில் எதற்காவது உதவலாம் 😛....         

3 comments:

  1. மிக அருமை 👌

    ReplyDelete
  2. வரலாற்றை அறிந்துக் கொள்ள இதுபோன்ற நாவல்கள் உதவுகிறது. அருமை... உங்களின் Diary எழுதும் பணித் தொடரட்டும்.

    ReplyDelete