Tuesday 16 April 2019

வானம் வசப்படும்



                      பிரபஞ்சன் - வானம் வசப்படும்



மானுடம் வெல்லும் புத்தகத்தைத் தொடர்ந்து வானம் வசப்படும் புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தேன். ஆனால் வேலைப் பளுவின் காரணமாகக் கொஞ்சக் காலம் எந்த புத்தகத்தையும் வாசிக்க முடியவில்லை. வானம் வசப்படும் புத்தகத்தை முழுவதுமாக வாசித்து முடிக்க ஒரு மாதத்திற்கு மேல் ஆகி விட்டது. 

மானுடம் வெல்லும் கதையின் தொடர்ச்சிதான் இந்த புத்தகம். இதைத் தனியாகப் படிக்கலாம் எனினும் மானுடம் வெல்லும் படித்து விட்டு, இதைப் படித்தால் கொஞ்சம் எளிமையாக இருக்கும். இந்நாவல் சாகித்ய அகாடமி விருதை   1995'ல்  பெற்றது

ஆனந்தரங்க பிள்ளையின் நாட்குறிப்புதான் இந்த புத்தகத்திற்கும் அஸ்திவாரம்.  மானுடம் வெல்லும் பாண்டிச்சேரி குவர்னர் துய்மா ஊருக்கு (பிரெஞ்சு நாட்டிற்கு) திரும்பிச் செல்வதாக முடியும். புது குவர்னர் துய்ப்ளெக்ஸ் வருவதில் வானம் வசப்படும்  தொடங்குகிறது. 

மானுடம் வெல்லும் போலப் பல கிளை சம்பவங்கள் வராமல் ஓரளவுக்குக் கோர்வையாகவே செல்கிறது அதனால்  நாவலின் தொடக்கம் முதல் இறுதி வரை ஆனந்தரங்க பிள்ளையே அதிகமாகத் தெரிகிறார். ஆனந்தரங்கர்  கடினமான அரசியல் சிக்கல்களை எப்படி தன்னுடைய  கீர்த்தியாலும் சாதுரியத்தாலும் தீர்த்து வைத்தார் என்பதுதான் ஓங்கி நிற்கிறது. ஆனால் பல பாத்திரங்கள் அவரை புகழ்ந்து கொண்டே இருப்பதும்  கொஞ்சம் சலிப்பைத் தருகிறது. 

 குவர்னரின் மனைவியான ழான், இக்கதையின் வில்லியாக (சித்தரிக்க)  படுகிறாள். பிள்ளைக்கு எதிராகச் செயல் படுவது, பாதிரியாருடன் சேர்ந்து கிறிஸ்துவ மதத்தை இந்தியாவில் பரப்புவது, கிறித்துவர்களுக்கு மட்டுமே அரசு ரீதியில் சலுகைகளும், கௌரவங்களும் தரப்பட வேண்டும் என்பது.  பணத்திற்காகப் பல வேலைகளைச் செய்வது. 

 நாவலின் பல இடங்களில் ழானை எல்லா கதாபாத்திரங்களும் சரமாரியாகத் திட்டுகிறது.  அவர்களுக்கு வரும் துன்பங்கள் அனைத்திற்கும் ழான் தான் காரணம் என்றும் அவளின் பேச்சைக் கேட்டுதான் குவர்னர் ஆடுகிறார் என்றும் மக்கள் அனைவரும் நினைத்துக் கொள்கிறார்கள். அதுவுமல்லாது எப்போதும் அவளை "முண்டை" என்று எல்லோரும் திட்டிக் கொண்டே இருக்கின்றனர். முண்டை என்ற வார்த்தையை ஆசிரியர் பிள்ளையின் நாட்குறிப்பிலிருந்து எடுத்தாரா அல்லது அவரின் சொல்லாடலா எனத் தெரியவில்லை.

 ழானினை பற்றிய இந்த குறிப்புக்கள் அனைத்தும் பிள்ளையின் நாட்குறிப்பிலிருந்து எடுக்கப்பட்டது என்பதை நாம் நினைவில்  கொள்ள வேண்டும்.  அவரின் பார்வையிலே சொல்லப்பட்டிருப்பதால், ழான் உண்மையிலே வில்லியாக இருந்திருக்கலாம் அல்லது பிள்ளைக்கு ழானின் மேல் காழ்ப்புணர்ச்சிக்கு  ஏற்படப் பின்வருபவை காரணமாக இருந்திருக்கலாம். 

 ஆனந்தரங்கர் வைணவ மரபைச் சார்ந்த ஒரு உயர் ஜாதி இந்து அதனால் மத மாற்றத்தின் மேல் அவருக்கு இருந்திருக்கக் கூடிய இயல்பான துவேஷம், ழானின் மேல் கோபமாக மாறி இருக்கலாம். அதேபோல் பெண்கள் வீட்டு வேலை செய்து கொண்டு கணவனுக்கு அடங்கிப் போவதையே விரும்பும் அந்த கால ஒரு மனிதரால் ஆட்சிப் பொறுப்பில் பங்கேற்க விழையும் ஒரு பெண் திமிர் பிடித்தவளாகவும் "முண்டை"யாகவும் தெரிந்திருக்கலாம்.

 அக்காலத்தில் பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்தில் மதமாற்றம் எந்த அளவு மக்களின் மேல் திணிக்கப் பட்டது என்பதை (கோவில் உடைக்கப் படுவது முதல் ...) பல இடங்களில் ஆசிரியர் குறிப்பிடுகிறார். இந்து மதத்தில் ஜாதி பேதங்கள் இருப்பதைக் காரணம் காட்டி கடை நிலை மக்களைக் கிறித்தவத்திற்கு மத மாற்றம் செய்ய விரும்பும் பிரஞ்சு பாதிரிகளையும், ஆனால் அதே போல் மதம் மாறிய உயர் ஜாதிக்காரர்கள் கிறித்தவத்திலும் ஜாதி பேதங்களைக் கொண்டு வந்ததையும் பல இடங்களில் இப்படைப்பிலும் காண முடிகிறது. 

  ராபர்ட் கிளைவ் வருகின்ற இடங்கள் நாவலில் சுவாரசியமாக இருந்தாலும் கொஞ்ச நேரமே வருகிறார். அவரின் கதையை இன்னும் கொஞ்சம் அதிகப் படுத்தியிருக்கலாம்.

  கடைசியில் நாவல் எந்த ஒரு உச்சக் கட்டமும் இல்லாமலும், முற்றுப் பெறாமலும் முடிக்கப்பட்டது போல் உணர்ந்தேன் –  அதற்குக் காரணம் தினமணி ஆசிரியராகப் அப்போது புதிதாக பொறுப்பேற்ற  மாலன் அதை உடனடியாக முடிக்கும்படி  பிரபஞ்சனிடம்  சொன்னதாக ஒரு குறிப்பில் படித்தேன். 


இறுதியாக :

      நம்மில் பலர் மேலோட்டமாக வரலாறுகளைத் தெரிந்து கொண்டு ஆங்கிலேயர் (அந்நியர்) காலத்தில் இந்தியாவில் ஆட்சி நன்றாக இருந்ததாகச் சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால் அதிகாரிகள் மட்டத்தில் அதிகமாக ஊழல் தொடங்கியதும், உச்சக்கட்ட ஊழல் நடந்ததும் அந்த கால கட்டங்களில்தான். காரணம், பிரிட்டிசார் இந்தியாவுக்கு வந்து ஆட்சியைப் பிடித்த வெறும் இருபதாண்டுகளில் இங்கே மிகப்பெரிய அலுவலர் ஆட்சியமைப்பு ஒன்றை உருவாக்கிவிட்டனர். சொல்லப்போனால் அதுவே உலகிலேயே மிகப்பெரிய அலுவலர் ஆட்சியமைப்பு. அதை அவர்கள் அன்று ஊதியம் வழங்கி நிலைநிறுத்த முடியாது. அந்த அளவு நிதி அவர்களிடம் இல்லை. ஆகவே அன்றைய பிரிட்டிஷ் அரசுப் பணிகளுக்கு ஊதியமாக அளிக்கப்பட்டது மிகச்சிறிய அடையாளத் தொகை மட்டுமே. ஊழல் செய்யும் வாய்ப்பே உண்மையான ஊதியம்.  உதாரணம் ராபர்ட் கிளைவ். ஒன்றுமே இல்லாமல் இந்தியா வந்த அவன் இங்கிலாந்து திரும்பும் பொழுது மில்லியனராக சென்றான். பிறகு ராபர்ட்  கிளைவ் மீது பெரும் ஊழல் குற்றச்சாட்டைக் கூறி இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விவாதம் எல்லாம் நடந்தது தனிக் கதை பிரிட்டிசார் நமது நாட்டை விட்டுச் சென்ற பின்பும் நமது அரசாங்கத்தில் இன்னும் சில பணிகள் இவ்வாறு தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வருவதுதான் சோகம் ........



2 comments: