Sunday 21 April 2019

கமலாம்பாள் சரித்திரம்



                              கமலாம்பாள் சரித்திரம்
                                   ( ஆபத்துக்கிடமான அபவாதம்)





விமர்சகர்கள்  சிலரின் பரிந்துரை பட்டியலிலிருந்ததால் இந்த நாவலைப்
படித்தேன். தமிழில் வெளிவந்த முதல் தொடர்கதையாகவும், தமிழில் வெளிவந்த இரண்டாவது நாவலாகவும் ( சிலர் மூன்றாவது என்கிறார்கள்) அறியப்படுகிறது. இதனை
பி.ஆர். இராஜமையர் என்பவர் விவேக சிந்தாமணி என்னும் இதழில் 1893யில்   ஆபத்துக்கிடமான அபவாதம் அல்லது கமலாம்பாள் சரித்திரம் என்று தொடராக எழுத ஆரம்பித்து உள்ளார்.

கமலாம்பாள் சரித்திரம் என்ற பெயரைக் கொண்டிருந்தாலும் முழுக்க முழுக்க கமலாம்பாளை மையமாகக் கொண்டு இல்லாமல், அவளோடு தொடர்புடைய ஏனைய கதைமாந்தர்களையும் மையப்படுத்தியே கதை நகர்கிறது.

19ம் நூற்றாண்டின் கடைசியில் தமிழ் நாட்டில் அதுவும் மதுரைக்கு அருகே உள்ள ஒரு சிற்றூரில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறையையும்,  வாழ்ந்த காலத்தின் சிக்கல்களையும்,  தனிப்பட்ட மக்களின் குணாதிசயங்களையும்  அறிய உதவுகிறது.

பொறுமையுடன் பிறரை அனுசரித்துப் போகும் கமலாம்பாள், நல்ல குணமும் ஊருக்கு உதவும் பெரும் தன்மையும் கொண்ட முத்து ஸ்வாமி அய்யர்.

பொறாமையும் அகங்காரமும் கொண்ட பொன்னம்மா, அவளுக்கு துர் உபதேசம் பண்ணித் தூண்டி விடும் மகாசபையும் அதன் அங்கத்துப் பெண்மணிகளும் ..

தமிழ் ஆசிரியர் ஆடுசாப்பட்டி அம்மையப்ப பிள்ளை, வம்பர் சபையின் அக்ராசனாதிபதி சுப்பு , திருடன் பேயாண்டித்தேவர் என  ஒவ்வொரு கதாபாத்திரமும் தனித்தன்மையுடன் சுவைப் பட உள்ளது . 

இராஜமையரின் வர்ணனைகளும், அங்கங்கே உள்ள நுட்பமான நகைச்சுவையும்  நாவலைச் சுவாரசியமாக்குகிறது.  அந்த காலத்தில் இருந்த குழந்தை திருமண முறை, அப்போது அவர்களுக்கு இருந்த மனநிலை, கணவன் மனைவி உறவு மற்றும்  இடையே இருந்த ஊடல் மற்றும் கூடல், வம்பு பேசும் பெண்கள் குழு எனச் சற்றும் சுவாரசியம் குறையாமல் விவரிக்கிறது கமலாம்பாள் சரித்திரம்.

கதாபாத்திரங்களை இராஜமையர் அறிமுகப் படுத்திய விதம் என்னை மிகவும் கவர்ந்தது. 

பொன்னம்மாள் யதார்த்தத்தில் கமலாம்பாள் படித்ததில் பாதிகூடப் படித்திராவிட்டாலும், தன்னிடமுள்ள சொற்ப சரக்குகளை வைத்துக்கொண்டு எல்லாம் படித்துவிட்டதாகப் பாவனை செய்வாள்’ என்று பொன்னம்மாவை அறிமுகம் செய்கிறார். ‘அன்னம்மாளுக்கு ஒரு தாயார் உண்டு, அவள் பொன்னம்மாளைக் காட்டிலும் குணவதி. அவளுக்குச் சங்கரியென்று பெயர். அவள் தொட்ட காரியம் ஒன்றும் துலங்காது’ என்று அவள் அம்மாவை அறிமுகம் செய்கிறார்

சில விஷயங்கள் இன்று நாம் படிக்கும் போது நமக்கு வேடிக்கையாக இருந்தாலும் நாவல் எழுதப்பட்ட காலத்தை ( சுமார் 125 ஆண்டுகளுக்கு முன்னாள்) மனதில் கொண்டு வாசித்தோமானால் ரசித்துப் படிக்கலாம். 

இறுதியாக :

  நாவல் முழுவதும் வாசித்தபின் எனக்குச் சிவாஜியின் பழைய படங்கள்தான் நினைவுக்கு வந்தது.  பொதுவாக ஒரே டெம்ப்ளேட் ... கதாநாயகன் தொடக்கத்தில் பெரிய பணக்காரனாக இருப்பான் ... கதையின் ஓட்டத்தில் அவனுடைய உறவினர்களால் எல்லாவற்றையும் ( சொத்து, குடும்பம்) இழந்து கடை நிலைக்குப் போய் , கடைசியில் அவசர அவசரமாக அனைவரையும் ஒன்று சேர்த்து சுபமாக முடிப்பது.


4 comments:

  1. இந்த நாவலை நான் முன்பே வாசித்துவிட்டேன். முடிந்தால் பிரதாப முதலியார் சரித்திரம் நாவலையும் வாசியுங்கள்.

    ReplyDelete
  2. அருமை, தினமும் ஒரு நாவல் வாசித்து விடுகிறாய்.
    அந்த கதைப்பற்றிய ரசனையையும் தூண்டிவிடுகிறாய்.
    லாக்டவுண் முடிந்த பின்பு படிக்க வேண்டும்.

    ReplyDelete
  3. அருமை.உண்மையில் கதை படிக்க தூண்டிவிடுகிறாய்.

    ReplyDelete
  4. தினம் ஒரு நாவல்! உம்மால் இது எப்படி முடிகிறது? அருமை as always

    ReplyDelete