Wednesday 20 May 2020

குற்றப் பரம்பரை



         குற்றப் பரம்பரை - வேல  ராமமூர்த்தி



காவல் கோட்டத்தை அடுத்துக் குற்றப் பரம்பரை நாவலை வாசிப்பதா அல்லது வேறு நாவலா எனக் குழப்பம். இரு நாவல்களும் பேசும் கதையின் மையக்கரு கொஞ்சம் ஒத்திருப்பதால் மனதில் மலரும் ஒப்பீடுகளைத் தவிக்கத்தான்😊. கள்ளர் இனக்குழுவின் வாழ்வியலைப் பேசுவதுதான் வேல ராமமூர்த்தி எழுதிய குற்றப் பரம்பரை. கூட்டாஞ்சோறு என்ற தலைப்பில் ஜூனியர் விகடனில் (2007) தொடராக வந்துள்ளது. 

தங்களை அழிக்க நினைக்கும் (அரசாங்க) குதிரைப்படையால் விரட்டப்படுகையில் பலரை இழந்து, வேலுச்சாமி தன் கூட்டத்தினருடன் சம்பங்கி ஆற்றைக் கடந்து ஓடுகிறான். ஆற்றை நோக்கி ஓடுகையில் அவரது மூத்தமகன் சேது வழி தவறி  குதிரை வீரர்களிடம் அகப்பட்டுக் கொள்கிறான். பெரும்பச்சேரியை சேர்ந்த தாழ்த்தப்பட்ட சிறுவன் வையத்துரை உதவியால் முள்ளுக்காட்டுக்குள் உள்ளே உள்ள கொம்பூதி என்ற மலைக்கிராமத்தில் குடியமர்கிறார்கள். வேலுச்சாமி பலதரப்பு மக்களாலும் மதிக்கப்படும் நபராக மாறி வேயன்னா என்று மரியாதையாக  அழைக்கப்படுகிறார். வளர்ந்து விட்ட அவரின் இரண்டாவது மகன் வில்லாயுதமும், வையத்துரையும் அவர்களுடன் இணைந்து களவு தொழிலைத் தொடர்ந்து செய்து வருகிறார்கள். களவில் கிடைக்கும் பொருட்களை பெருநாழி கிராமத்தைச் சேர்ந்த பச்சமுத்துவிடம் கொடுத்து ஈடாக உணவுத்தானியங்களைப் பெறுகிறார்கள். 

பெரும்பச்சேரி காரணமாக பெருநாழி மற்றும் கொம்பூதிகளுக்கிடையே புகைச்சல் வரும் நேரத்தில் கொம்பூதி கள்ளர்களை அடக்க  அரசாங்கம் கச்சேரியை (போலீஸ் ஸ்டேஷன்) பெருநாழியில் அமைக்கிறது. முதல் இன்ஸ்பெக்டர் வெள்ளைக்கார விக்டரை வேயன்னாவின் கூட்டம் ஊரை விட்டே துரத்துகிறது. கொம்பூதி கள்வர் இனத்தை அழித்தே தீருவேன் என்ற சூளுரையுடன் குற்றப் பரம்பரை சட்டத்தை அமல்படுத்த முயலும் இன்ஸ்பெக்டர் பகதூரை உலகத்தை விட்டே துரத்துகிறார்கள். வெள்ளைக்கார (வளர்ப்பு) பெற்றோர்களால் வளர்க்கப்பட்ட அவரது மூத்த மகன் சேது புதிய இன்ஸ்பெக்டராக பதவியேற்கக் காட்சிகள் திசைமாறுகிறது. இனிமேல் களவு செய்யக்கூடாது என வேயன்னாவிடம் சத்தியம் வாங்குகிறான் சேது. களவுகள் நடக்காததால் பாதிக்கப்படும் பச்சமுத்து சூழ்ச்சிகள் செய்து கலவரத்தைத் தூண்டுகிறான். அதனால் சேது மற்றும் போலீஸ் அதிகாரிகள் எடுத்த தீர்மானங்கள் என்ன? வேயன்னாவுக்கு என்ன நடந்தது? என்பதுதான் நாவலின் முடிவு. 

இக்கதைக்கு நடுநடுவே வரும் வைரப் புதையலைத் தேடும் நாகமுனி, அதற்காக அவன் நரபலி கொடுக்க வளர்க்கும் அழகுப் பதுமை வஜ்ராயினி, அவளைக் காட்டில் பாதுகாக்கும் ஹசார் தினார், வஜ்ராயினி மீது காதல் கொள்ளும் வேயன்னாவின் புதல்வன் வில்லாயுதம் என்று வளரும்  Fantasy கிளைக்கதை சுவாரஸ்யமாக இருந்தாலும் மூலக்கதையின் நோக்கத்தைச் சிதைக்கும் திணிப்பாகத் தோன்றியது. 

வேல ராமமூர்த்தியின் கதை சொல்லும் பாங்கு நாவலை விறுவிறுப்பாகச் சிறிதும் தொய்வின்றி கொண்டுசெல்லுகிறது. வேயன்னாவை சாதி வேறுபாடுகளைப் பார்க்காமல் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை எதிர்ப்பவராக, நியாயத்திற்குக் கட்டப்பட்டவராக, பிறர்பால் பரிவு கொண்டு உதபுவராக, வேற்றூர் மக்களும் மதிக்கும் ஒரு பெரிய மனிதனாகச் சித்தரிக்கிறார். களவை அவ்வின மக்கள் தவறான செய்கையாக நினைக்காமல் தங்களது குலத்தொழிலாக எண்ணுகின்றனர். இந்த நாவலும் களவுகளால் பாதிக்கப்பட்டவர்களின் மனநிலை சிறிதும் பேசாமல் கள்வர்களின் வீரத்தை மட்டுமே சிகாலித்து எழுதியிருப்பது கொஞ்சம் உறுத்தல்தான். 

நாவலோடு பயணிக்கும்போது சந்திக்கும் கதைமாந்தர்களான வேயன்னாவின் அம்மா கூழானிக் கிழவி, சிட்டு, அன்னமயில், கிழட்டுப் போலிஸ், இருளாயி, கழுவன், துருவன், விசக்குட்டை நாவலை வாசித்து முடிந்த பின்பும் மனதில் தாக்கத்தைத் தருகிறார்கள். அம்மக்கள் புறத்தோற்றத்தில் கரடுமுரடாகத் தோன்றினாலும் அகத்தோற்றத்தில் மாசற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதையே யதார்த்தமாகக் கூறுகிறார்.

கதையிலுள்ள சில லாஜிக் மீறல்களை விமர்சனத்தில் சுட்டிக்காட்ட நினைத்திருந்தேன்.

"டேய் வையத்துரை, உள்ளே வாடா...." கிழட்டு போலிஸ் இளக்காரமாக அழைக்கவும், "ஏய்... முட்டாள் கிழவா... !  அறிவிருக்கிறதா உனக்கு? கச்சேரிக்கு யார் வந்தாலும் மரியாதையாகப் பேசு" எனச் சேது சீற்றத்தோடு கூறுகிறான்.  

முரண்பாடு உங்களுக்கே புரிந்திருக்கும். கதையின் இறுதி நிகழ்வுகள் கொஞ்சம் சினிமாத்தனமாக நகர்ந்தாலும் எளியநடையிலான நல்லதொரு நாவலை வாசித்த திருப்தியே விஞ்சியதால் அவற்றினை தவிர்த்துவிட்டேன்.

இறுதியாக:

 குற்றப் பரம்பரையை யார் திரைப்படமாக எடுப்பது எனப் பாலாவும், பாரதிராஜாவும் குடுமிப்பிடி சண்டையிட்டது😤 உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். அந்த சமயத்தில் வேல ராமமூர்த்தி எழுதிய இந்நாவலை அடிப்படையாகக் கொண்டுதான் பாலாவின் குற்றப் பரம்பரை திரைப்படம் வருவதாக அறிவிக்கப்பட்டது.

6 comments:

  1. விமர்சனத்தில் கதையை விவரித்த பாங்கு அருமை. எளிதாக அனைவரும் வாசிக்கும் விதத்தில் உள்ள நாவல் எனத் தெரிகிறது.காவல் கோட்டத்திற்கும், குற்ற பரம்பரைக்கும் உள்ள வித்தியாசங்களை சொல்லியிருக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. ஒப்பீட்டைத் தவிக்க நினைத்தாலும் நீங்கள் கேட்டதால் சிலவற்றைக் கூறுகிறேன். குற்றப் பரம்பரை முன்பு நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கற்பனைகளைக் கொண்டு சுவாரசியமாக எழுதப்பட்ட நாவல். காவல் கோட்டம் எழுதிய முறையில் அது பேசும் வரலாறு எனத் தனித்து நிற்கிறது. குற்றப் பரம்பரையில் கள்வர் இனம் களவை மட்டுமே செய்கிறது. சில நேரங்களில் களவில் தோல்வியும் அடைகிறது. காவல் கோட்டத்தில் கள்வர்களின் கையில் காவலும் ஒப்படைக்கப் படுகிறது. அவர்கள் களவில் தோற்றுத் திரும்பியதாக எந்த இடத்திலும் பதிவு செய்ததாக நினைவில்லை. இவ்விரு நாவல்களுமே பேசாதது கள்வர் இனம் எப்படி உருவானது அதாவது அவர்கள் எவ்வாறு களவைக் குலத்தொழிலாக ஏற்றுக்கொண்டனர். காவல் கோட்டம் 600 ஆண்டுகளின் சம்பவங்களைப் பேசுவதால் இதனையும் சொல்லியிருக்க வேண்டும் என்பது என் எண்ணம்.

      Delete
  2. கதையின் நாயகர்களை நேர்மையான ஹீரோக்கள் ஆக்குவது இயல்பானது தானே. விமர்சனத்தை எழுதிய விதம் அருமை.

    ReplyDelete
  3. வேல ராமமூர்த்தியின் எழுத்து வாசிக்க வைக்கிறதோ இல்லையோ!!. நீங்கள் நாவலைப் பற்றி எழுதிய எழுத்து அந்த புத்தகத்தை வாங்கத் தூண்டுகிறது! பார்ப்போம்! பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  4. விறுவிறுப்பான நாவல் , யதார்த்தம், புதையல் தேடும் இடங்களில் magic realism கலந்திருக்கிறார்.
    முரண்பட்ட இரண்டு சமூகத்தை இணைக்கும் புள்ளிகளை சேர்த்திருக்கிறார்.

    ஒரு இடத்தில் சொல்லியிருப்பார், ' ரெண்டு சாதி பயலுகளையும் சட்டையை கழட்டிவிட்டால் ரெண்டு பேருக்கும் எந்தவித்தியாசமும் கிடையாது' என்பார் .

    ReplyDelete