வால்கா முதல் கங்கை வரை
- ராகுல சாங்கிருத்தியான்
ராகுல சாங்கிருத்தியான் 1942'ல் எழுதிய வால்கா முதல் கங்கை வரை புத்தகத்தை நான் கல்லூரி நாட்களிலே வாசித்து விட்டேன். மீண்டும் ஒருமுறை வாசிக்கத் தூண்டியது யுவால் நோவா ஹராரி எழுதிய சேப்பியன்ஸ் புத்தகம் தந்த அனுபவம். ஒரு வரலாற்று ஆய்வுக் கட்டுரையை வாசிக்கும் அனுபவத்தை சேப்பியன்ஸ் தரும் ஆனால் வால்கா முதல் கங்கை வரையோ ஒரு நாவலை வாசித்த உணர்வைத் தரவல்லது. காரணம் சுமார் எட்டாயிரம் ஆண்டுகாலமாக மனித சமுதாயத்தில் மெல்ல மெல்ல நடந்த நிகழ்ந்த மாற்றத்தினையும் வளர்ச்சிப் படிநிலைகளையும் நிகழ்வுகளின் பின்னணியில் இருபது தலைப்புகளில் சிறுகதைகளின் வடிவாக ஆசிரியர் எழுதியிருப்பது.
இருபது கதைகளில் முதல் பத்து கிறிஸ்து பிறப்பதற்கு முந்தைய காலகட்டத்தையும், அடுத்த பத்து கிறிஸ்துக்கு பிந்தைய காலகட்டத்தையும் பிரதிபலிக்கிறது. கி.மு 6000'வில் வால்கா நதிக்கரையில் ஆரம்பித்து கி.பி 1942'வில் கங்கை நதிக்கரையில் முடிவடைகிறது. ஒவ்வொரு கதையும் தனித்தனியே என்ன பேசுகிறது என்பதைவிட பொதுவாக எதைப்பற்றிப் பேசுகிறது என்பதைச் சொல்ல முயன்றிருக்கிறேன்.
இனக்குழுவாக இருந்த மனிதர்கள் உணவுக்காக வேட்டையாட இடம் பெயர்வது அதனால் மற்ற குழுவினரோடு ஏற்படும் மோதல். காலமாற்றத்தோடு மோதலின் போது பயன் படுத்திய ஆயுதங்களின் உருமாற்றம்.. தாய் வழிச் சமுகமாக வளர்ந்து வந்த மனிதச் சமுதாயம் நாளடைவில் எவ்வாறு ஆண்களால் பெண்களின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு அடிமையாக்கப்படுகிறார்கள் என்பதை விளக்கி இறுதி கதைகளில் ஆண் பெண் ஏற்றத்தாழ்வுக்கு எதிராகப் பொருமுகிறார். பெண்களுக்கு மறுக்கப்பட்ட சொத்துரிமை, உடன்கட்டையேறுதல் ஏன் பிரிட்டனில் கூட பெண்களுக்கு அப்பொழுது ஓட்டுரிமைக் கிடையாது.
வால்காவிலிருந்து இடம்பெயர்ந்து வந்த ஆரியர்களை விட இந்தியாவில் முன்பே வாழும் அசுர (திராவிடர்கள்) இனமக்களின் கலாச்சாரம் மேம்பட்டு இருந்ததாகக் கூறினாலும் அவர்களது மன்னர் ஆட்சி முறை, மன்னரையே தெய்வமாக நினைப்பது, அடிமைகள் முறை போன்றவற்றால் எண்ணங்களால் மேம்படவில்லை என்கிறார். ஆரியர்கள் அசுரர்களின் லிங்க வழிப்பாட்டை வெறுத்தாலும் பின் நடந்த இனகலப்பில் அதனை அவர்களும் பின்பற்ற ஆரம்பித்து மன்னர் ஆட்சி, புரோகிதர் கலாச்சாரத்தில் ஒன்றிவிடுவதை விவரிக்கிறார். அசுரர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கடல் கடந்து வணிகங்களைச் செய்ததாக முன்வைக்கிறார். குதிரை, பசு மாமிசங்களும், சோமபானமும் எல்லோராலும் பொதுவாக உண்ணக்கூடிய சாதாரண செயலாகவே இருந்துள்ளது.
குப்தர்களின் காலகட்டத்தில்தான் மக்களின் பஞ்சாயத்து (குடியாட்சி) முறை ஒழிக்கப்பட்டு, பிராமணர்களின் கைகள் ஓங்கி சர்வாதிகாரம் பெற்ற மன்னராட்சிக்கு அடித்தளம் ஏற்பட்டதாக விமர்சனம் செய்கிறார். மன்னர்களைப் புகழ்ந்து வர்ணித்து அவர்களைக் காவியத்தலைவனாகக் கொண்டு இதிகாசங்களும், காப்பியங்களும் படைக்கப்பட்டதாகவும் கூறுபவர், ஜெயச்சந்திர மகாராஜாவை (பிருதிவி ராஜனின் மாமா) பற்றி எழுதியவற்றை இப்பொழுது யாராவது எழுதியிருந்தால் சிலர் பெரிய கலவரத்தையே தோற்றுவித்திருப்பார்கள். கில்ஜியும், அக்பரும் சமூக நீதியோடு ஆட்சி செய்ய முயற்சி செய்ததாகக் கூறுகிறார்.
மங்கள சிங் கதை மூலம் சிப்பாய் கலகம் தோல்வியில் முடிய அதனை முன்னின்று நடத்தியவர்களின் சுயநலம்தான் என விமர்சிக்கிறார். நாமெல்லாம் பாடங்களில் படித்த, கேட்ட தோட்டாக்களின் உறையில் கொழுப்புத் தடவப்பட்ட நிகழ்வை ஆங்கிலேய எதிர்ப்பாளர்களின் உணர்வுகளைத் தூண்டப் பரப்பப்பட்ட வதந்தி என்பவர் ஆங்கிலேய அரசு மற்றும் கவர்னர்கள் மீது மிகத் தீவிரமான விமர்சனத்தை முன்வைக்கிறார். இந்தியச் சுதந்திரப்போராட்டத்தை மக்களிடம் கொண்டுசென்ற மகாத்மா காந்தியை மதித்தாலும் அவரின் சில செயல்பாட்டை அறிவியல் காலத்திற்கு ஒவ்வாத பிற்போக்கு எண்ணங்கள் எனச் சாடுகிறார். காந்தி மீது இந்துத்துவவாதி முத்திரையைக் குத்த ஆசிரியர் முயல்கிறாரோ என்ற எண்ணம் என்னுள் எழுந்தது. ஆரியர் கலப்பு, இஸ்லாமியர் கலப்பு, ஆங்கிலேயர் கலப்பு எனப் படிப்படியாக விவரிப்பவர் இன்று ஆரியர் என்று தனியாக யாரும் கிடையாது அந்த அளவிற்கு இரத்தக் கலப்புகள் நடைபெற்று விட்டது என்கிறார்.
ராகுல சாங்கிருத்தியானின் சமய நல்லிணக்க ஆதரவு எண்ணமும், புத்தரின் கொள்கையில் கொண்ட ஈடுபாடும், பொதுவுடைமைக்குக் கொள்கைகள் மீது கொண்ட தீராப் பற்றும், அவரின் அரசியல் நிலைப்பாடும் கதாபாத்திரங்கள் வழியே வெளிப்படுகிறது. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பஞ்சாயத்து முறையைத் தூக்கிப்பிடிக்கிறார். சரித்திரத்தைக் கதை உருவில் தந்திருப்பதால் எளிதாக நம்மால் அந்தந்த காலகட்டத்தோடு சுவாரஸ்யமான பயணிக்க முடிந்தாலும் சிலருக்கு ஆய்வு நூலில் புனைவுகள் இருக்கலாமா என்ற தர்க்கம் மனதில் தோன்றலாம். ஆனால் அதன் கற்பனைகளை ஏற்றுக்கொள்வது, நிராகரிப்பதும் வாசிப்பவரின் மனநிலையைப் பொறுத்ததே. மனித நாகரிக வரலாற்றைத் தெரிந்து கொள்ளும் ஆர்வமிருக்கும் யாவரும் வாங்கி படிக்க வேண்டிய புத்தகம் இது.
இறுதியாக :
இப்புத்தகத்தை ராகுல சாங்கிருத்தியானின் தமது சிறை வாசத்தில் 1942'ல் ஜெயிலில் இருந்து கொண்டே எழுதினார். அதனைக் கண. முத்தையா அவர்கள் 1949'ல் ஜெயிலில் இருந்து தமிழில் மொழிபெயர்த்துள்ளார். கல்லூரி காலத்தில் வாசித்தது கண. முத்தையா அவர்களின் மொழிபெயர்ப்புதான். இப்பொழுது வாசித்தது யூமா வாசுகி அவர்களின் மொழிபெயர்ப்பு. எனது சகோதரர் இரண்டுக்கும் உள்ள வேறுபாடு மற்றும், இருகால கட்டத்திலும் வாசித்த போது என் மனதில் தோன்றிய கருத்து மாறுபாடுகளையும் எழுதுமாறு கூறினார். வாய்ப்பிருந்தால் பின்னொரு முறை கட்டாயம் எழுதுவேன்.