Saturday 9 May 2020

காவல் கோட்டம்



                காவல் கோட்டம் - சு வெங்கடேசன்



சாகித்ய அகாடமி விருதை 2011'ஆம் ஆண்டு பெற்றதால் பலரின் கவனத்தை ஈர்த்த நாவல். எனது சகோதரர் வாசித்துவிட்டு அவரே நாவலையும் தந்து பரிந்துரைத்தார். புத்தகத்தின் தடிமனைப் பார்த்துவிட்டு வாசிக்க சிறுத் தயக்கம் எனக்கு அதிகம் பரிச்சயமில்லாத நாவலாசிரியர் என்பதால். பெரிய நாவல்களைத் தொடர்ச்சியாக வாசிக்க ஒரு நீண்ட உற்சாகம் தேவை. இல்லையெனில் அயர்ச்சியைத்  தந்து அப்புத்தகத்தைத் தொடவே மனமில்லாமல் செய்துவிடும். 

நான் மானுடம் வெல்லும்  விமர்சனத்தில் கூறியது போல் கல்கி, சாண்டில்யன் போன்றவர்கள் எழுதிய சரித்திர நாவல்கள் சில வரலாற்றுச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு நிறையக் கற்பனையுடன் ஜனரஞ்சகமாக எழுதப்பட்டவை. ஆராய்ச்சிக் கட்டுரைகளை வாசித்து வரலாற்றைத் தெரிந்துகொள்ள மிகுந்த  பொறுமையும், ஆர்வமும் தேவை. அதனை எளிமையாக்கும் விதமாக அவற்றில் சாத்தியமான சில துணைக் கதாபாத்திரங்களை நுட்பமாகச் சேர்த்து ஆவணப்படுத்தப்பட்ட வரலாற்றின் பக்கங்கள் சிதையாமல் எழுதப்படும் சரித்திர புதினங்களின் வரிசையில் வருவதுதான்  சு.வெங்கடேசன் எழுதியுள்ள காவல் கோட்டம்.    

மாலிக்காபூரின் தென்னக படையெடுப்பில் ஆர்ப்பாட்டமாகத் தொடங்கும் நாவல் அடுத்த அத்தியாயத்திலே விஜயநகர மன்னன் குமார கம்பணனின் மதுரை முற்றுகைக்குள் நுழைந்து விடுகிறது. அவனால் மதுரை மீனாட்சியம்மன் மீண்டும் தன் குடிக்குள் (கோவிலுக்குள்) திரும்புகிறாள். மதுரா விஜயத்தின் தொடர்ச்சியாக நாயக்கர்களின் வரலாற்றைச் சொல்ல ஆரம்பித்துவிடுகிறார். நான் வாசித்து விமர்சனம் எழுதியுள்ள அகிலனின் வெற்றித் திருநகர் நாவல், கிருஷ்ணதேவராயர் மற்றும் விஸ்வநாத நாயக்கர் கதை என்பதால் எனக்கு வாசிக்க எளிமையாக இருந்தது. தாதனூர் கள்வர்களின் களவுத் திறனில் மெச்சிய திருமலை நாயக்கர், மதுரையை காவல்காக்கும் உரிமையை அவர்களுக்குத் தருகிறார். நாயக்கர்களின் அரசு வீழ்ச்சியற்ற பின் ஆதிக்கம் செலுத்தும் பிரிட்டிஷ் அரசாங்கம் பல ஆண்டுகளாகத் தொடரும் பாரம்பரிய நகரக்காவல் முறையை ஒழித்து, போலீஸ், நீதிமன்ற நிர்வாக முறையைப் புகுத்த முயல்கிறது. அதனால் தாதனூர்காரர்களுடன் மூளும் மோதல்களைக் குற்றப் பரம்பரை சட்டங்களைப் பயன்படுத்தி எவ்வாறெல்லாம் ஒடுக்கினார்கள் என்பதே நாவலில் முடிவு. 

நாவலைப்பற்றிய எனது பார்வையை எழுதுவதற்கு முன்பு ஆசிரியர் சு.வெங்கடேசனுக்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகள். சுமார் 600 ஆண்டுகளின் வரலாற்றைத் தொகுத்து எழுதுவது சாதாரணமான காரியமல்ல. இதற்காக அவர் பத்தாண்டுகள் உழைத்ததாகக் கூறியுள்ளார். அந்த உழைப்பு நாவலின் ஒவ்வொரு சமூகவியல் நுட்பங்களிலும் வெளிப்பட்டு மலைக்கவைத்தது. 

நாவலின் முதல் 350 பக்கங்கள் நாயக்கர்கள் காலத்தின் வரலாற்றைப் பேசுகிறது. இறுதியில் விஜயரங்க சொக்கநாத நாயக்கர் காலத்துக் கதை கொஞ்சம் அயர்வைத் தந்தாலும்  பொதுவாக மிகவும் ரசித்து வாசித்தேன். சுமார் 300 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்ட நாயக்கர்களின் வரலாற்றை நாம் வெளிச்சம் போட்டுக் காட்டுவதில்லை. ஏன்? பள்ளி வரலாற்று பாடபுத்தகங்களிலும் அவை விரிவாக வருவதில்லை. இதன் காரணங்களைப் பற்றிப் பேசினால் விமர்சனத்தின் போக்கே மாறிவிடும். சரித்திரக்கதைகளை வாசிக்கும் போது அக்காலகட்டத்தின் விவரங்களை நாவலுக்கு வெளியிலும் தேடித் தேடி வாசிக்கும் (கெட்ட*) பழக்கம் எனக்கு உண்டு. (*கெட்ட-- தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்று பிறரிடம் காட்டிக்கொள்ளவே இந்த தேடுதல்கள் - என்மீது சுமத்தப்படும் விமர்சனம்😢). திருநெல்வேலி கிருஷ்ணாபுரம் பெயர்க்காரணம், காந்திமதி அம்மன் கோவில், ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவில் கோபுரத்தைக் கட்டியது யார், பாளையக்காரர்கள் உருவாக்கப்பட்ட வரலாறு, ராணி மங்கம்மாவின் இறுதிக் கணங்கள், குமாரசாமி நாயக்கன் ஏன் ஊமைத்துரை ஆனான் உட்பட ஏராளமான தகவல்களைத் தெரிந்துகொண்டேன். மொகலாயர்களின் காலத்தில்தான் ஆட்சி மாற்றங்கள் சுமுகமாக நடந்ததில்லை என நம் மனதில் பதிய வைக்கப்படுகிறது. ஆனால் எக்காலத்திலும்  ஆட்சி மாற்றங்கள் சதி, துரோகங்களால் குழப்பங்களிலே நடந்துள்ளன.

இரண்டாம் பகுதிதான் நாவலின் அடிநாதமான காவல் தொழில் செய்த கள்ளர்களின் வாழ்க்கையை மற்றும் வீழ்ச்சியைப் பிரதானமாகப் பேசுகிறது கொஞ்சம் மெதுவாக. பிரிட்டிஷ்  அரசின் நேரடி ஆளுமைக்குக் கீழ்  மதுரை வந்தவுடன் அதன் கலெக்டராக வரும் பிளாக்பர்ன், நகரின் விஸ்தரிப்பைக் காரணம் காட்டி மதுரைக் கோட்டையை இடிக்கிறார். பின் அரசு சார்பில் நகரின் முதல் போலீஸ் ஸ்டேஷன் அமைக்கப்படுகிறது. கோட்டை இடிப்புக்கு அவர் பயன்படுத்தும் உத்தி, போலிஸ் ஸ்டேஷன் அமைந்த பின் அதனைப்பற்றிய மக்களின் மனநிலையை அருமையாகச் சித்தரித்துள்ளார். போலீஸ் ஸ்டேஷன் வந்ததிலிருந்தே தாதனூர் மக்களின் நகர் காவலுக்குச் சிக்கல் தொடங்கிவிடுகிறது. தாது வருடத்தில் மதுரை சந்திக்கும் கடும் பஞ்சம் மற்றும் கொள்ளைநோயால் நிறைய உயிர்ச்சேதம் நிகழ்கிறது. பஞ்சத்தின் கோரதாண்டவத்தை மொழிநடையால் நம் கண்முன்னே நிறுத்துகிறார். பலமுறை தடைப்பட்ட முல்லைப்பெரியாறு அணையைக் கட்டிமுடித்துப் பல ஊர்களில் வேளாண்மையை அதிகப்படுத்துகிறார்கள். புதியதாக மதுரைக்கு வரும் கலெக்டர் தாதனூர்க்காரர்களின் காவல் உரிமை ரத்து செய்யப்பட்டதைத் தீவிரமாக அமல்படுத்த, சிலர் வேறுவழியின்றி மதுரையைச் சுற்றியுள்ள வெளி கிராமங்களின் காவலைப் பிடிக்கிறார்கள். எதிர்த்தவர்கள் சிறைப் படுத்தப்படுகிறார்கள் அல்லது சுட்டுக்கொல்லப்படுகிறார்கள். அரசாங்கம் தாதனூருக்கு ரோடு அமைத்து அருகிலே ஒரு சிறைச்சாலையையும் கட்டுகிறது. குற்றப் பரம்பரை சட்டம் அமல்படுத்தப்பட்டு அனைவரின் கைரேகைகளும் பதிவு செய்யப்படுகின்றன. அவர்களில் மனோபலத்தைச் சிதைக்கவும், இயக்கங்களைக் கட்டுப்படுத்தவும் தினசரி பலமுறை ஆஜராக உத்தரவிடப்பட்டு மீறுபவர்கள் சித்தரவதை அனுபவிக்கிறார்கள்.

காவல் உரிமை கிடைத்தாலும்  தாதனூர் மக்கள் அனைவரும் அதனை மட்டுமே செய்வதில்லை. பல குழுக்கள் (கொத்து) களவு தொழிலையும் தொடர்ந்து செய்துவந்தன. காவல் கூலியைத் தர மறுப்பவர்களின் இடங்கள், பிற ஊரின் காவல்கட்டுபாட்டில் வரும் பகுதிகள், காவலில்லாத பகுதிகளில் அவர்களின் களவு தொழிலும் தொடர்ந்தது. ஏன் ரயில்லேறிச் சென்று தூரத்து ஊர்களிலும் களவுச் செய்கின்றனர். சில நேரங்களில் காவலை விடக் கள்வரின் வாழ்க்கைதான் அழகியல் நோக்கோடு காட்டப்பட்டு களவை நியாயப்படுத்த முயல்கிறதோ எனத் தோன்றியது. களவுகளால் பாதிக்கப்படுபவர்களின் வலியை, மனநிலையை இன்னும் ஆழமாகக் கையாண்டிருந்தால் இந்த உணர்வு தோன்றாமல் இருந்திருக்கலாம்.  சில இடங்களில் நாவல் கொஞ்சம் வழி மாறிப் போய் நெற்கதிர் கசக்குவது, மாடு, ஆடு திருடுவது போன்ற களவின் தகவல்களே திரும்பத்திரும்ப வருவது அலுப்பைத் தந்தது. அதுவும் இறுதியில் வரும் குரங்குகளைப் பிடித்து வரும் களவு, அமணமலையில் அமர்ந்து ஆட்டுக்கறி சுட்டுச் சாப்பிடுவதெல்லாம் தேவையற்ற தகவல்களின் திணிப்பாகத் தோன்றியது.

பெண் கதாபாத்திரங்களைப் படைத்த விதத்தில் ஆசிரியர் உயர்ந்து நிற்கிறார்கள். நாவலே சடச்சியின் பிள்ளைகள் (வழித்தோன்றல்கள்) பற்றித்தானே. அதுவும் கங்காதேவி பாத்திரம் வடிவமைக்கப்பட்ட விதம் ultimate. அதற்காகவே இரண்டாம் அத்தியாயத்தை சில முறை வாசித்தேன். பஞ்சகாலத்தில் எவ்விதமான எதிர்பார்ப்புமின்றி மக்களின் பசி தீர்த்த தாசி குலப்பெண் குஞ்சரத்தம்மாள், தன் இனமக்களை வதைக்கும் வெள்ளைக்கார காவலனைக் கொலை செய்யும் வீராயி, வெள்ளைக்காரனைக் கழுத்திலே கடித்துக் கொல்லும் அங்கம்மா கிழவி எனக் கள்ளர் குலப்பெண்களின் உக்கிரத்தையும் பதிவுசெய்கிறார். ஆனால் கள்வர் இனத்தில் ஏற்படும் இழப்புகளின்போது அவர்களைச் சார்ந்துள்ள குடும்பத்தினர் படும் துயரம், எதிர்கொண்ட விதம் மற்றும் மனவோட்டத்தை சொல்ல முயலவேயில்லை. 

மாயாண்டி பெரியாம்பிளைத் தவிரப் பிற துணைக் கதாபாத்திரங்கள் நினைவில் வைத்துக்கொள்ளும் அளவில் அழுத்தமாகப் படைக்கப்படவில்லை. படிப்படியாக வளர்ந்து விரியும் காலளவுகளைக் கொண்ட நாவலில் அதுபோல் பாத்திரங்களைக் கட்டமைப்பது எளிதுமல்ல. கள்ளர் இனத்தில் பிறந்து மிஷனரி பள்ளியில் படித்து போதகராக மாறும் டேவிட் சாம்ராஜ் பாத்திரம் இன்னும் தெளிவோடு படைக்கப்பட்டிருக்கலாம். இரவை தொழிற்களமாக்கி புரியும் காவலையும், களவையும் இரு கண்களாகக் கொண்ட ஒரு சமூகத்தின் இந்நாவலை நீங்கள் ஒவ்வொருமுறை வாசிக்கும் போதும் ஏதேனும் புதிய தகவலோ, வரலாற்று உண்மையோ தெரியவந்து மலைப்பையும் பிரமிப்பையும் தரலாம்.

இறுதியாக:

தாதனூர் பெரியாம்பிள ஒச்சு போலீஸ்காரரை நோக்கி "எங்களுக்கு திருமலை நாயக்கர் கொடுத்த காவடா" என சீறுகிறார். இந்த ஒரு சொல்லுக்காகத்தான் நாயக்கர் காலத்திலிருந்து நாவலை ஆரம்பித்துள்ளார் போலும். வாசிக்கும் போது புத்தகத்தின் சுமைத் தாங்காமல் (Hard Cover)  கை வலித்து சிரமமாக இருந்தது. ஆனால் இரண்டு பாகங்களாக வெளியிட்டிருந்தால் தனித்தனி நாவலாக மாறிவிடும் அபாயமுள்ளது 😀. இந்த நாவலின் சில பக்கங்களை மையைப்படுத்தி எடுக்கப்பட்டதுதான் அரவான் திரைப்படம்.

6 comments:

  1. உங்கள் விமர்சனத்தில் காவல் கோட்டத்தையே கண் முன்னால் காட்டி விட்டீர்கள். அருமை நேரம் கிடைத்தால் கட்டாயம் வாசிக்க முயற்சிக்கிறேன் விஷ்ணுபுரம் விமர்சனத்தில் துணைக் கதாபாத்திரங்கள் நாவல் முழுவதும் travel செய்யாததால் தாக்கம் குறைந்ததாக எழுதியுள்ளீர்கள். இங்கு என்ன வித்தியாசம் நண்பரே?

    ReplyDelete
    Replies
    1. காவல் கோட்டமும் துணைக் கதாப்பாத்திரங்களை கொண்டு கட்டமைக்கப்பட்டாலும், வரலாற்று புதினம் என்பதால் நாவலுடன் பயணிக்க எளிதாக இருந்தது. விஷ்ணுபுரம் பிரமாண்ட கற்பனை மிகுதி நாவல் என்பதால், கொஞ்சம் கடினமாக இருந்தது.

      Delete
  2. As always மிக அருமை அண்ணா 😍

    ReplyDelete
  3. காவல் கோட்டம் விமர்சனம் மிகவும் நன்றாக இருக்கிறது. சாகித்ய அகாடமி விருது பெற்றதால் வாசிக்க தூண்டினாலும் அதிக பக்கங்களை கொண்டதால் ஆரம்பிக்கவே தயக்கமாக இருக்கு.

    ReplyDelete
  4. காவல் கோட்டம்- சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவல் என்ற எண்ணத்தில் மிகுந்த ஆவலுடன் வாசிக்க ஆரம்பித்தேன். ஒரு சில பக்கங்களை கடந்தவுடன் வாசிக்கும் பயணம் மிகுந்த சிரமமாக இருக்குமென தோன்றியது. அதற்கேற்றாற்போல் ஒரு சில எதிர்மறை விமர்சனங்களையும் படிக்க நேர்ந்தது வாசிப்பில் இன்னும் அலுப்பை ஏற்படுத்தியது.
    சிறு வயதிலிருந்தே வாசிக்கும் பழக்கம் இருக்கிறது. இன்னமும் அந்த ஆர்வம் இருப்பதால் எப்படியேனும் புத்தகத்தை முடிக்காமல் விடுவதில்லை என்ற வைராக்கியத்துடன் வாசிப்பை தொடர்ந்தேன். ஆயிரம் பக்கங்களை கொண்ட நாவலில் கால் வாசியளவு கடந்ததும் வெயிலில் செல்லும் போது தீடிரென தென்றல் வீசியது போல் வாசிப்பு இனிமையானது.
    ஆரம்பத்தில் நாவலுக்கான எந்த வடிவமும் இல்லாதது போல் தோன்றினாலும் நிச்சயம் சிறந்த நாவல் என்பதில் சந்தேகமில்லை. தொடக்கத்தில் பெரும்பான்மையான இடங்களில் வரலாற்று ஆவணத்தை வாசிப்பது போன்ற எண்ணம் எழுவதை தவிர்க்க முடிய வில்லை.
    ஆசிரியர் அவர் சொல்ல வந்த வரலாறை சொல்லுவதற்குள் கூறும் முன்னோட்டம் பெரும் அலுப்பை ஏற்படுத்துகிறது. நாயக்கர் வரலாறை குறைத்திருந்தால் நாவல் இன்னும் சிறப்பாய் வந்திருக்கும் என்பது என் எண்ணம்.
    இதுவரை வாசித்த சரித்திர நாவல்களில் வரும் வெறும் அலங்கார வருணனைகள் போலில்லாமல் ஆசியரின் எழுத்து நடை பல இடங்களில் வியக்க வைக்கிறது.
    வந்தியத்தேவன், அருள்மொழி வர்மன், குந்தவை, நந்தினி, ஆழ்வார்க்கடியான், மாமல்லர், சிவகாமி, நாக நந்தி, ஆயனர், ரோகிணி, இளங்கோ, பஞ்சவன்மாதேவி என என் மனதிற்குள் வாழும் கதாபாத்திரங்களுடன் இனி கட்டையன், கழுவன், மாயக்காள், கழுவாயி, சின்னான், மாயாண்டி, ஜேம்ஸ் ஃபாதர் என்ற பெயர்களும் இருக்கும் என்றே நம்புகிறேன்

    ReplyDelete